அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாகனத்தில் செருப்பு வீசிய வழக்கில், சம்மந்தப்பட்ட 3 பேரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் மரணம் அடைந்தார். அவர் உடல் விமான மூலம் மதுரைக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உட்படப் பலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், அஞ்சலி செலுத்தப் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர், தொண்டர்கள் என ஏராளமானோர் விமான நிலையத்திற்கு வெளியே நின்றிருந்தனர்.
ராணுவ வீரர் லட்சுமணனுக்கு மரியாதை செலுத்தி விட்டு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காரில் சென்ற போது பாஜக தொண்டர்கள் அமைச்சர் காரின் மீது காலணி வீசினர். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மதுரை விளாங்குடி வேங்கை மாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செத்திருந்தனர்.
அண்மைச் செய்தி: ‘நொய்டா; காவலாளியைத் தாக்கிய பெண்ணிற்கு ஜாமீன்’
இந்த மனு இன்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ள 3 நபர்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கைத் தீர்ப்புக்காக ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.








