தமிழ்நாடு நிதி அமைச்சர் வாகனத்தில் காலணி வீசப்பட்ட வழக்கில் பாஜக மகளிர் அணி மாவட்டத் தலைவி உள்பட 3 பேருக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் மறைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்து திரும்பிய நிதியமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் காலணியை வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மதுரை அவனியாபுரம் காவல்துறையினர் நேற்று முன்தினம் பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலா, திருச்சியைச் சேர்ந்த கோபிநாத், ஜெய கிருஷ்ணா, முகமது யாகூப், முன்னாள் மண்டல தலைவர் ஜெயபால் உள்பட 7 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலும் 25பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து மொத்தம் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று நள்ளிரவில் தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் கருமாத்தூர் அருகே வாகை குளம் பகுதியில் பாஜக மாவட்ட மகளிர் அணித் தலைவி தனலெஷ்மி, மாவட்ட மகளிர் செயலாளர் சரண்யா மற்றும் தெய்வானை உள்பட 3 பேரைக் கைது செய்தனர்.
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார்’
இதனையடுத்து 3 பேருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் பலத்த பாதுகாப்புடன் மதுரை மாவட்ட 6ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சந்தானம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து 3பேருக்கும் ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பாஜக மகளிரணியானர் 3பேரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 3 பேருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் மண்டல தலைவர் ஜெயவேல் நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








