எங்களுக்கு பின்னால் பெரிய பலம் உள்ளது என்றும் நாங்கள் மேலே உயர எங்கள் வீட்டு பெண்கள் தான் காரணம் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள விருமன் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் இசிஆரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, விருமன் திரைப்படத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கேமராவுக்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எந்த வெற்றியும் தனி வெற்றி கிடையாது. குடும்பங்கள் ஒரு முக்கிய காரணம். எங்களை மேலே உயர்த்தி விட எங்களுக்கு பின்னால் ஒரு பெரிய பலம் உள்ளது. எங்களை மேலே உயர்த்தி விடுகிறார் என்றால் அது எங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் தான்.
அவர்களின் தியாகங்கள் அதில் அடங்கியுள்ளது. ஆண்கள் வெற்றி பெறுவது சுலபம். பெண்கள் பத்து மடங்கு கஷ்டப்பட்டால் தான் அந்த பெயர் பெண்களுக்கு கிடைக்கும். அவர்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்துள்ளனர். தியாகம் என்பதற்கு உள்ளே நிறைய வார்த்தைகள் உள்ளது இங்கு எல்லாரையும் அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என நினைத்தோம் அனைவருக்கும் நன்றிகள். பெண்களை முன்னாள் வைத்து வாழ்க்கையை பார்த்தால் வாழ்க்கை இன்னும் அழகாக தெரியும் என தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகர் கார்த்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓடிடியில் படம் பார்த்து மக்கள் மாறிவிட்டார்களா என்ற எண்ணம் இருந்தது. ஒருவேளை நம்முடைய தமிழ் மக்கள் மாறிவிட்டார்களா என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் விருமன் வெற்றி அந்த எண்ணத்தை மாற்றி விட்டது என்றார். குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.
பாதி நேரம் நம்முடைய நேரத்தை தொலைபேசி எடுத்துக் கொள்கிறது. அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி. பெண்களுக்கு இந்த ஒரு நாளாவது ஓய்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தோம் என கூறினார்.
-இரா.நம்பிராஜன்








