மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த
சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு, மரங்கள் விழுந்தன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மழையின் தாக்கம் குறைந்து காணப்பட்ட நிலையில், உதகை கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான பைக்காரா படகு இல்லம் ஐந்து நாட்களுக்கு பின் இன்று மதியம் திறக்கப்பட்டது.
கோடை சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா
மற்றும் வட மாநிலங்களில் இருந்து உதகைக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் பைக்காரா படகு இல்லத்தில் குளுகுளு கால நிலையை அனுபவித்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.








