காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது!

பெற்றோர்கள் சம்மதமின்றி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞரை, பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26). இவர்…

பெற்றோர்கள் சம்மதமின்றி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞரை, பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26). இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜல்லடியன்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஷர்மியின் வீட்டார் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்களின் சம்மதம் இன்றி ஷர்மியை பிரவீன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெப்பத் திருவிழா – கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்!

இந்நிலையில் ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பள்ளிக்கரணை டாஸ்மாக் கடை அருகே நேற்று பிரவீனை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பிரவீனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகிலிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் பிரவீனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலையான பிரவீன் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.தங்கையை பெற்றோர்கள் விருப்பம் இல்லாமால் அழைத்து சென்று திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த ஷர்மியின் அண்ணன் தினேஷ், பிரவீனை கொலை செய்து பழிதீர்த்துக் கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ், ஸ்டீபன், ஸ்ரீ, விஷ்ணு, ஜோதி லிங்கம் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குடன், 325 (SC/ST ACT) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக பிரவீன் மற்றும் ஷர்மியின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.