தென்காசியில் கணவன் கண்முன்னே வேறொரு இளைஞருடன் மனைவி உறவு கொண்டதால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி உள்ள நடுமாதா கோவில் தெரு பகுதியில் சந்திரன் தமது நாற்பத்தைந்து வயது மனைவி சித்ராவுடன் வசித்து வந்தார். இதில் சித்ரா கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வீட்டில் முகம் சிதைவடைந்த நிலையில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தென்காசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, முதற்கட்ட விசாரணையில் சந்திரன் சித்ராவை கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, கொலை செய்து விட்டு தப்பி ஒடிய சந்திரனை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், நெல்லையில் வைத்து காவல்துறையினர் சந்திரனைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்திரனை காவல் நிலையம் அழைத்து வந்து சித்ராவின் கொலை செய்த காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சந்திரன் அவரது நண்பர் ஒருவருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வைத்து மது அருந்தியபோது, சந்திரனுக்கு போதை தலைக்கு ஏறவே மது குடித்த இடத்திலே போதை மயக்கத்தில் படுத்து தூங்கியுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அவரது நண்பர், சந்திரனின் மனைவியான சித்ராவுடன் உறவு கொண்ட போது, போதை தெளியவே சந்திரன் எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தபோதும், தன் உயிருக்கு அவர்களால் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தனக்கு எதுவும் தெரியவராததைப் போல் மீண்டும் சந்திரன் படுத்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில், அந்த நாள் முதல் கடும் மனவேதனையில் இருந்த சந்திரன், தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சித்ராவுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சித்ரா தங்களது உறவு குறித்து வெளிப்படையாக சந்திரனிடம் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சந்திரன் சித்ராவுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை கட்டிலில் படுக்க வைத்து கை கால்களைக் கயிற்றால் கட்டியுள்ளார். தொடர்ந்து, அவரை கொலை செய்வதற்கு ஆயுதங்களைத் தேடிய நிலையில், எதுவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த அம்மி கல்லை வைத்து சித்ராவின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இதில் முகம் சிதைவடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சித்ராவை அப்படியே விட்டுவிட்டு சந்திரன் தப்பி ஓடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், பூட்டிய வீட்டினுள் பெண்ணின் சடலமானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விரைந்து செயல்பட்டு கொலை வழக்கினை முடிவிற்கு கொண்டு வந்துள்ளனர்.
சௌம்யா.மோ






