பல்லடம் அருகே பிஏபி வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண்,பெண் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த மஞ்சப்பூர் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் இரு சடலங்கள் மிதந்து வந்துள்ளன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவிநாசிபாளையம் காவல் நிலையத்திற்கும், பல்லடம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர் துறையினர் தண்ணீரில் அடித்து வரப்பட்ட 2 சடலங்களை மீட்டனர்.
அது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சடலம் என்பதும் தெரியவந்தது. சடலத்தை மீட்கும் போது இரு உடல்களும் துணியால் இணைத்து கட்டப்பட்டு இருந்ததாகவும், மேலும் உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததாகவும் போலிசார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இரு சடலத்தையும் போலிசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலங்கள் இணைத்து கட்டப்பட்டடு இருந்ததால், இவர்கள் இருவரும் காதலர்களா, அல்லது கணவன் மனைவியா,எந்த பகுதியை சேர்ந்தவர்கள், இது உயிரிழப்பா அல்லது கொலையா என்ற கோணத்தில் அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரசுராமன்.ப, மாணவ ஊடகவியலாளர்







