யானைக் கூட்டங்களில் நின்று கொண்டிருந்த குட்டி யானை ஒன்று மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தது.
தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள அச்சன் கோவில் அலிமூக்கு பகுதியில் சாலையில் காட்டு யானைக்கூட்டம் சுற்றி திரிந்தது. அப்போது யானை கூட்டத்திலிருந்த 1½ வயது குட்டி யானை திடீரென்று சாலையோரம் மயங்கி விழுந்து இறந்தது.
அந்த சாலையில் சென்றவர்கள் யானை குட்டி இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து, உடனடியாக மண்ணறைப்பாறை வனத்துறை அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.
ஆனால் யானைகள் குட்டி யானையின் அருகிலேயே நின்றதால் வனத்துறையினர் காத்திருந்தனர். பின்னர் யானைகள் வனத்திற்குள் திரும்பிச் சென்றதை அடுத்து, குட்டி யானைக்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. குட்டி யானையைப் புதைத்தால் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் குட்டி யானையின் உடல் எரியூட்டப்பட்டது.
இருப்பினும், குட்டி யானை இறந்த இடத்தையே யானைக்கூட்டம் சுற்றிவருவதால் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என கேரள வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.







