ஆந்திர மாநிலத்தில் நடந்த நிலத்தகராறில், மிளகாய் பொடி தூவி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வெதுருகுப்பம் அடுத்த மேல் கனிகாபுரத்தை சேர்ந்த நாராயண ரெட்டி மற்றும் விஜயசேகர ரெட்டி குடும்பத்தினர் இடையே கடந்த சில ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருதரப்பினர் இடையே நேரிட்ட மோதலின் போது, விஜயசேகர ரெட்டியை கொலை செய்திட நாராயணரெட்டி தரப்பினர் திட்டமிட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தடுக்க முயன்ற விஜயசேகரரெட்டியின் மனைவி சந்திரகலா மீது, மிளகாய்பொடியை தூவி நாராயணரெட்டி கத்தியால் குத்தி கொடூர தாக்குதலில் ஈடுபட்டார். இதில் பலத்த காயமுற்ற சந்திரகலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையறிந்த நாராயணரெட்டி குடும்பத்தினர் அங்கிருந்து தப்பியோடினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்திரகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.







