அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு கட்சிகள் தயாராகும் நிலையில் ஒருங்கிணையுமா அதிமுக என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று அக்கட்சியனரால் அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், சில மாதங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. டிடிவி தினகரன் அமமுக என்கிற தனிக் கட்சி தொடங்கி பயணிக்க, சசிகலா, ஓபிஎஸ் என இருவரும் தனித்தனியாக, ’’’’அதிமுகவை உரிமை கோரும் சட்டப்போராட்டம் தற்போதும் தொடர்கிறது என்கிறார்கள்.
ஜெயலலிதாவுடன் நீண்ட காலம் நெருங்கிப் பயணித்த சசிகலா, ”நான் அனைவருக்கும் பொதுவான நபர். சாதி பார்த்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கியிருக்க மாட்டேன். அ.தி.மு.க-வில் இருந்து விலகிய அனைவரையும் ஒருங்கிணைப்பேன். ஒன்றுபடாததால்தன் தேர்தலில் அதிமுக தோற்றது. எனவே திமுகவை வீழ்த்த 2024 மக்களவைப் பொதுத் தேர்தலை அனைவரும் ஒருங்கிணைந்து சந்திப்போம். அதிமுக ஒருங்கிணையாமல் இருக்க திமுகதான் காரணம்” என்று திமுக எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்.
ஒருங்கிணைந்த, வாக்கு வங்கி சிதையாத அதிமுக கூட்டணியைத்தான் டெல்லி மேலிடம் விரும்புகிறது என்கிறார்கள். கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளை தன்பக்கம் வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி ”டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகிய மூவருக்கு மட்டும் அதிமுகவில் இடமில்லை என்கிறார். அதேநேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாரையும் விமர்சிக்காமல் மென்மையாகவே கருத்து சொல்லி வருகிறார் சசிகலா. ஆனால், இபிஎஸ் தரப்பில் சசிகலா மட்டுமின்றி, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மூவரையும் காட்டமாகவே விமர்சித்து வருகின்றனர்.
தனது செல்வாக்கைக் காட்ட திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நடத்திய ஓபிஎஸ், அந்த மாநாடு தந்த உற்சாகத்தில் அடுத்த சில நாட்களில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சென்று டிடிவி தினகரனை சந்தித்தார். தொண்டர்களின் விருப்பப்படி இருவரும் இணைந்து செயல்படுவோம் என்றவர், தற்போது வரை நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றும் அடுத்து சசிகலாவையும் விரைவில் சந்திப்பேன் என்றார் ஓபிஎஸ்.
ஆனால், இன்னும் இவர்களின் சந்திப்பு நடக்கவில்லை. ஓபிஎஸ் மாநாட்டிற்கு சசிகலா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் ஜூன் 7ம் தேதி ஓபிஎஸ்-சசிகலா சந்திப்பு நடைபெறும். அப்போது டிடிவி தினகரனும் இருப்பார் என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மகன் திருமண விழாவில்தான் இந்த சந்திப்பிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான திட்டமிடலை வைத்திலிங்கம் செய்து வருகிறார் என்கிறார்கள். ஒன்றுபட்ட அதிமுகவின் டெல்டா முகமாக இருந்த அவர், ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவராகவும் உள்ளார். அவரால் நடக்கும் இந்த சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் பெறும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கடந்த 2 ஆண்டுகளில் சசிகலா எடுத்த முயற்சிகள், குறிப்பாக தொண்டர்கள், நிர்வாகிகளிடம் பேசும் ஆடியோ வெளியீடு, புரட்சிப் பயணம், அவ்வப்போது அறிக்கைகள் என எதுவும் பலனைத் தரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், ’’கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தலைமை பதவிக்கு வர முடியும். நான் நினைத்ததை முடித்து கொண்டே வருகிறேன். விரைவில் அனைவரும் ஓருங்கிணைவார்கள்’’ என்று அண்மையில் கூட சசிகலா தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்க திருமண மேடைகள், பல அரசியல் திருப்பங்களுக்கான தொடக்கப்புள்ளியாகவும் அமைந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த சந்திப்பும் ஒரு களமாக அமையுமா? அடுத்த பயணம் மூவரணியா? இபிஎஸ் உள்ளிட்ட நால்வரும் இணையும் ஓரணியா..? நினைத்ததை முடிப்பாரா சசிகலா…? பொறுத்திருந்து பார்க்கலாம்..!







