மதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், பொதுச் செயலாளராக வைகோவும், முதன்மைச் செயலாளராக துரை வைகோவும் போட்டியின்றி தேர்வாகவுள்ளனர்.
மதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளான அவைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு மே 21-ம் தேதி வெளியானது. அதன்படி, இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகமான தாயகத்தில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.
தேர்தல் ஆணையாளர்களாக மதிமுக அமைப்புச் செயலாளர் இரா.பிரியகுமார், கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் மற்றும் தேர்தல் பணிச் செயலாளராக இரா.அந்திரிதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைக் கழக நிர்வாகிகளான அவைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்களாக ஐவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழு தகுதி பெற்ற இருபத்தைந்து பேர் முன்மொழிந்தும், இருபத்தைந்து பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும்.
ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக ஏழு பேரும், தணிக்கைக்குழு உறுப்பினர்களாக ஆறு பேரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழு தகுதி பெற்ற பத்து பேர் முன்மொழிந்தும், பத்து பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்கு வைகோ மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்வாக உள்ளார். முதன்மைச் செயலாளர் பதவிக்கு துரை வைகோ, அவைத் தலைவர் பதவிக்கு ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், பொருளாளர் பதவிக்கு செந்திலதிபன், துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு மல்லை சத்யா, ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், டாக்டர் ரொக்கையா, தி.கோ.ராஜேந்திரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
எனவே அனைவரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 3-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், தேர்வானவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அப்போது வெளியாகும்.
துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு டாக்டர் ரொக்கையா மனுதாக்கல் செய்துள்ள நிலையில், முதல் முறையாக பெண் ஒருவர் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







