சிங்கத்தையே ஜெயிக்கும் ஆமை பற்றி உங்களுக்கு தெரியுமா?

முயல் ஆமை கதையில் முயலை வென்ற ஆமையை பற்றி கேள்வி பட்டிருப்போம், நிஜத்தில் சிங்கத்தையே வென்ற ஆமையை பற்றி உங்களுக்கு தெரியுமா? டைனோசர் காலத்தில் இருந்தே அழியாமல் வாழ்ந்து வரும் பொக்கிஷமான அலிகேட்டர் ஸ்னாப்பிங்…

முயல் ஆமை கதையில் முயலை வென்ற ஆமையை பற்றி கேள்வி பட்டிருப்போம், நிஜத்தில் சிங்கத்தையே வென்ற ஆமையை பற்றி உங்களுக்கு தெரியுமா?

டைனோசர் காலத்தில் இருந்தே அழியாமல் வாழ்ந்து வரும் பொக்கிஷமான அலிகேட்டர் ஸ்னாப்பிங் ஆமைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த அரிய வகை ஆமைகள் சிங்கத்தையே வென்றுவிடும் என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? விரிவாக பார்ப்போம்..

டைனோசர் காலமான 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகத்தில் தோன்றிய, உலகின் மிகப்பெரிய ஆமைகளில் ஒன்று அலிகேட்டர் ஸ்னாப்பிங் ஆமைகள். Macrochelys temminckii என்பது இதன் Scientific name. இவை அமெரிக்காவில் அதிகமாக காணப்படுகிறது. நதி, ஏரி, ஈரமான நிலம் போன்றவை இந்த ஆமைகளுக்கு விருப்பமான வாழ்விடங்களாக இருக்கிறது.

இந்த ஆமைகள் அதிகபட்சமாக 80 செ.மீ வரை வளரும். 113 கிலோ எடை வரை இருக்கும். இந்த ஆமை வகை பார்க்க சாதுவாக தெரிந்தாலும். இது பயங்கரமான வேகத்தில் தாக்கக்கூடியது என உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இவை தாக்கினால் எலும்புமுறிவு கூட ஏற்படலாம்.

இந்த ஆமை வகையால் 1000 பிஎஸ்ஐ வேகத்தில் நம்மை தாக்க முடியுமாம். அதாவது காட்டுக்கே ராஜான்னு பெயர் வாங்குன சிங்கமே வெறும் 650 பிஎஸ்ஐ வேகத்தில் தான் தாக்கும்னா பார்த்துக்கொள்ளுங்களேன். இவ்வகை ஆமைகளுக்கு மீன், பாம்பு, நண்டு, தாவரங்கள், பறவைகளை இது போன்ற உணவுகள் தான் பிடிக்குமாம். இந்த அலிகேட்டர் ஸ்னாபிங் ஆமைகள் இதன் நாக்கை பயன்படுத்தி தான் வேட்டையாடுமாம்.

இந்த ஆமை வகையின் நாக்கு புழு போன்ற தோற்றத்தில் இருக்கும். நீருக்கு அடியில் இந்த ஆமைகள் தனது வாயை திறந்து, பல மணி நேரம் அசையாமல் காத்திருக்குமாம். இதை பார்த்து புழு என்று நம்பி பக்கத்தில் வரும் மீன்களை இந்த ஆமைகள் வேட்டையாடும். அதேபோல, இந்த ஆமைக்கு மற்றொரு சூப்பர் பவரும் இருக்கிறது. உடலில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் மூலம், தனது இறை எங்கே மறைந்திருந்தாலும் இந்த ஆமைகள் அதை சுலபமாக கண்டுபிடித்துவிடுமாம்.

இந்த ஆமைகள் தனது முக்கால்வாசி வாழ்நாளை நீரிலேயே செலவிடுமாம். 40 முதல் 50 நிமிடங்கள் வரை இந்த வகை ஆமைகள் நீருக்கு அடியில் சுவாசிக்காமல் இருக்கும் திறன் கொண்டவை. மேலும், தனது ஓடுகள் மேல் பாசி வளர்வது கூட தெரியாமல் இந்த ஆமைகள் நீருக்குள் இருக்கும் என உயிரியலாளர்கள் சொல்கின்றனர்.

இந்த ஆமைகளின் ஆயுட்காலம் 100 -120 ஆண்டுகள். இவை வசந்த காலத்தில் இனபெருக்கம் செய்யுமாம். பெண் ஆமைகள் 2 மாதங்களுக்குப் பிறகு முட்டையிடுமாம். இந்த முட்டைகள் 100 முதல் 140 நாட்களுக்குப் பிறகு குஞ்சு பொரிக்குமாம். அப்படி பிறந்த ஆமைகள் இனப்பெருக்கத்துக்கு தயாராக சுமார் 11 – 13 ஆண்டுகள் ஆகுமாம்.

முயலும், ஆமையும் கதை போல, பேரழிவுகளில் சிக்கி டைனோசர்களே அழிந்தாலும், 9 கோடி ஆண்டுகளாக இந்த பூமில பல இன்னல்கள தாண்டி அழியாமல் வாழ்ந்து வரும் அலிகேட்டர் ஸ்னாப்பிங் ஆமைகளுக்கு மனிதர்கள் தான் மிகப்பெரிய அச்சுறுத்தல் என உயிரியலாளர்கள் சொல்கின்றனர்.

வாழ்விடங்களை அழித்தல், உணவுக்காக வேட்டையாடுதல், வணிகத்திற்கு பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் இவ்வகை ஆமைகள் குறைந்து கொண்டே வருகிறது. இவை பாதுகாக்கப்படவேண்டியவை என்பதால் சில நாடுகளில் இந்த வகை ஆமைகளை வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்ந்தால் இன்னும் 25 ஆண்டுகளில் இந்த ஆமைகள் மொத்தமாக அழிந்துவிடும் என உயிரியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.