மேடையில் கண்கலங்கிய வேட்பாளர் சத்தியபாமா – ஆறுதல் சொன்ன முதலமைச்சர் விஜய்!

திமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றதை பொறுக்காமல் அங்கிருந்து வெளியேறினேன் என்று சத்தியபாமா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டி வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜய் கடந்த 25-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இன்று தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கோள்கிறார்.

முதலமைச்சர் விஜயின் வருகையை ஒட்டி தாராபுரம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரச்சாரம் நடைபெறும் திடலில் அனுமதி சீட்டு பெற்ற 5000 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். கோவை சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் விஜய் தாராபுரம் தொகுதியில் உள்ள மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டம் மேடைக்கு வந்தடைந்தார். கோவையில் இருந்து திருப்பூர் வந்த முதலமைச்சர் விஜய்க்கு சாலையில் நின்ற பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பிரசார பொதுக்கூட்ட இடத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் தவெக தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் சேர்ந்த செம்மலையை த.வெ.க. துண்டு அணிந்து கட்சியில் இணைத்துக் கொண்டார். மேலும், சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.-வில் இணைந்த தலைவர்கள் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு விஜய பாஸ்கர்களும் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து வேட்பாளர் சத்தியபாமா பேசுகையில், “நான் பார்ப்பது கனவா, நினைவா என்று தெரியவில்லை. இதுவரை இது போன்ற கூட்டத்தை நான் பாத்ததில்லை. காசு கொடுத்தால் கூட இன்னேரம் கலைந்து சென்றிருப்பார்கள். புரட்சி தலைவரின் மறுபிறவியோ என்று தெரியவில்லை. திமுகவுடன், இபிஎஸ் கூட்டணி வைக்க நினைக்கவில்லை என்றால் நான் இப்போது இங்கிருந்திருக்க மாட்டேன். எனவே அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

திமுகவுடன் சேர்ந்து கொண்டு நான் முதல்வர் ஆவேன் என்று பாண்டிச்சேரியில் சந்தோஷமாக இருந்தார்இபிஎஸ். பொதுசெயலாளர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் இபிஸ். பொதுச்செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் புஸ்ஸி ஆனந்த். தாராபுரம் மக்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு சென்று விட்டது. என் மீது தவறு இருந்தால் உங்களிடம் துணிச்சலாக பேச முடியுமா? என் மீது சுமத்தப்படும் பழிகள், ஆபாச பேச்சுகள் என்னை காயப்படுத்துகிறது. நான் தவறு செய்யவில்லை, அவ்வாறு செய்திருந்தால் நான் உங்கள் முன்பு வந்து நிற்க மாட்டேன். ஒரு பெண் என்று பாரமல் என்னை சமூக வலைதளத்தில் அவதூறு செய்தார்கள் என்று கண்கலங்கி பேசிய சத்தியபாமாவிற்கு மேடையில் ஆறுதல் தெரிவித்தார் முதலமைச்சர் விஜய்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.