தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் உண்மையான வெற்றிக் கூட்டணி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அப்பகுதியில் முதலமைச்சர் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக கூட்டணி தான் உண்மையாக வெற்றிக் கூட்டணி என கூறினார். மேலும், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என நம்பிக்கை தெரிவித்த அவர், மு.க.ஸ்டாலினுக்கு துணிவிருந்தால் என்னோடு நேருக்குநேர் விவாதிக்க தயாரா, என சவால் விடுத்தார்.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில், ஆவணம் கைகாட்டி என்னுமிடத்தில், முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது திறந்த வேனில் நின்றபடி பேசிய அவர், நெடுவாசல் பகுதியில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அதிமுக அரசு தடை செய்தது என்றும், 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத காவிரி பிரச்னைக்கு, தீர்வு கொண்டு வந்தது அதிமுக அரசு தான், என்றும் குறிப்பிட்டார்.







