கோடைவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற 125 வது மலர்க்கண்காட்சி
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் இதமான கோடை சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக மலர்க்கண்காட்சி மற்றும் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12 வது காய்கறி கண்காட்சி கடந்த மே 6-ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து கூடலூரில் 12 வது வாசனை திரவிய கண்காட்சி மே 12-ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றது. பின் உதகை ரோஜா பூங்காவில் 18 வது ரோஜா கண்காட்சி மே 13-ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றது.
இந்த நிலையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான, உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவின் 125 வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது. மலர் கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து மலர்களை பார்வையிட்டனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 325 ரகங்களில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில், பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் டேலியா, பிக்கோனியா, ஜால்வியா, கிரைசாந்திமம், இன்கமேரி கோல்ட், பிரெஞ்ச் மேரி, கோல்ட் பெட்டூனியா, லில்லி துலீப் உள்ளிட்ட மலர் தொட்டிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மலர் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மலர்க்கண்காட்சியின் சிறப்பம்சமாக 45 அடி உயரத்தில் 80 ஆயிரம் சிவப்பு, வெள்ளை கார்னேஷன் மலர்களை கொண்டு தோகை விரித்தாடும் பிரமாண்ட மயில் வடிவமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது போல் சிறுவர், சிறுமியர்களை கவரும் வகையில் புலி, சிறுத்தை, வரையாடு, டால்பின், பட்டாம்பூச்சி, சிட்டுக்குருவி, செந்தாங்கள் மலர் உள்ளிட்ட வடிவமைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிரமாண்ட நுழைவு வாயில், 125 வது மலர் கண்காட்சி வடிவமைப்பு, பூங்கா உருவாகி 175 வது ஆண்டு விழாவின் வடிவமைப்புகள் போன்றவை முழுக்க, முழுக்க கார்னேஷன் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் இந்த மலர்க்கண்காட்சியை கண்டு ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சுற்றுலா பயணிகள் தெரிவிக்கையில், உதகையில் நடைபெறும் மலர்கண்காட்சியினை குடும்பத்தினருடன் கண்டு ரசிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான வண்ண மலர்களை கண்டு ரசிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதேபோல் மலர் கண்காட்சி நடைபெறும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.







