இந்திய திரையுலகில் தன் வசீகரக் குரலால் தொடர் ஹிட் கொடுத்த சித்ஸ்ரீராம், தனது 33-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் அசாத்திய திரைப்பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தனது வசீகரக் குரலால் தொடர் ஹிட் கொடுத்த சித் ஸ்ரீராம் தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தி, மராத்தியிலும் பாடியுள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் 200 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இசை ரசிகர்களின் பிளே லிஸ்டில் ஒரு பாடலாவது இவரது குரலில் இடம்பிடித்திருக்கும்.
2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தில் இடம்பெற்ற அடியேய் பாடல் மூலம் தமிழ்திரையுலகத்திற்கு அடியெடுத்து வைத்தவர் சித் ஸ்ரீராம். தமிழ் திரையிசை அதற்கு முன்னே சுக்விந்தர்சிங், உதித் நாராயணன் போன்ற வித்தியாசமான குரல்களுக்கு மயங்கிக் கிடந்தது.
ஆனால், சித் ஸ்ரீராமின் குரல் வேறொறு தளத்திற்கு அழைத்துச் சென்றது. கர்நாடக சங்கீததமும் மேற்கத்திய இசையும் கலந்த கலவையாக, மூச்சு முட்ட இசைத்தேன் வழங்கும் சித் ஸ்ரீராம் தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி வட மொழிகளிலும் பாடி இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் பிறந்த சித் ஸ்ரீராமின் குடும்பம், அவருடைய ஒரு வயதில் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தது. சித் ஸ்ரீராமின் தாயார் லதா ஸ்ரீராம் கர்நாடக இசைப்பாடகர். அவரது சகோதரி பல்லவி நாட்டியக்கலைஞர். தாத்தா சி.ஆர்.ராஜகோபாலன் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர். இப்படி இசைச் சூழலிலேயே வளர்ந்த சித் ஸ்ரீராம், 2001-ம் ஆண்டு பி.எஸ்.நாராயண ஸ்வாமியிடம் இசை கற்க ஆரம்பித்தார்.
சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக இசைப்பயிற்சி பெற்று தேர்ந்த சித்ஸ்ரீராம், 2012 ஆம் ஆண்டு தன்னுடைய குரலை பதிவு செய்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பி வைத்தார். ஆயிரக்கணக்கானோர் ரஹ்மானுக்கு இப்படி வாய்ப்பு கேட்டு அனுப்புவதுண்டு. இருப்பினும் சித்ஸ்ரீராமின் குரலில் இருந்த தனித்தன்மையைக் கண்டுகொண்ட ரஹ்மான், கடல் படத்தின் மூலம் அவருக்கான இசைக்கதவை திறந்துவைத்தார்.

10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் 200 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் சித் ஸ்ரீராம். அதில், பெரும்பாலானவை ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுபவை. மேலும் சிறந்த பின்னணிப்பாடகருக்கான பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.







