வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தொடங்கியது. முன்னதாக அரங்கிற்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் 4,900 போ் கலந்து கொண்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் க்யூ.ஆா்.கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கூட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், காவல்துறை அறிவுறுத்தலின்பேரில், கூட்டம் நடைபெறும் இடத்தில் 140 அடி அகலம், 600 அடி நீளம் என்று மொத்தம் 84 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில், 36 அடி உயரத்தில் மேற்கூரையும், கேலரிகளுடன் 4,900 போ் அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் நிகழ்ச்சியில் ஒரு குட்டி கதை சொன்னார். அப்போது, “ஒரு பெரிய ஊரில் நான்கு வழிச் சந்திப்பு இருக்கிறது. அதன் நடுவில் முரட்டு ஜல்லிக்கட்டு காளை நிற்கிறது. யாரும் பக்கத்தில் போக முடியவில்லை. காளையை அடக்கினால்தான் அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர், எங்களுக்கு இல்லாத அனுபவமா? நாங்கள் பார்க்காத காளையா? என சிலர் சென்று அடக்க நினைத்தார்கள். ஆனால் அனைவரையும் காளை தூக்கி வீசியது. அப்போது கூட்டத்தை விலக்கி ஒரு சின்ன பையன் செல்கிறான். அவனை பார்த்து எங்களால் முடியவில்லை நீ என்ன செய்ய போற, அனுபவமுள்ள நாங்களே அடிபட்டு கிடக்கிறோம் என பேசுகிறார்கள். மற்றொரு பக்கம் பரிதாபப்படுகிறார்கள்.
இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாத சின்ன பையன் காளை அருகே சென்று, இரண்டு பாக்கெட்டில் இருந்து புல்லுக்கட்டை எடுத்து காளைக்கு கொடுக்கிறான். அந்த காளை புல்லுக்கட்டை சாப்பிட ஆரம்பித்துவிட்டது. சின்ன பையன் அருகே காளை குழந்தையைப் போல் நடந்து வந்தது.
அடிபட்ட அனுபவசாலிகள் தலையைத் தொங்கப்போட்டு இருந்தார்கள். அங்கு வந்த பெரியவர் முரட்டு காளையை எப்படி அடக்கின என்று கேட்டார். அந்த காளையைப் பார்த்தால் எனக்கு கோபமாக இருந்ததாக தெரியவில்லை. பசியோடு இருந்ததாகதான் தெரிந்தது, அதனால் உணவு கொடுத்தேன், அதுவும் என்னோடு வந்துவிட்டது என்றான்.
இதைகேட்ட பெரியர் சொன்னார், சின்னவங்க, பெரியவங்க, அனுபவம் உள்ளவங்க, இல்லாதவங்க என எதுவும் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு என்ன செய்து பிரச்னையை தீர்க்கிறான் என்பதுதான் முக்கியம் என பெரியவர் தட்டிக் கொடுத்தார். இந்த கதையில் முரட்டு காளைதான் அரசியல் களம், பெரியவர்தான் மக்கள், சின்ன பையன்தான் நானும் தவெகவும். நல்ல தலைமை இல்லாததால் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்த மக்கள் மத்தியில் வெகுஜன கட்சியாக வந்ததுதான் தவெக” எனத் தெரிவித்துள்ளார்.







