தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
“மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, இன்று தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருவையாறு உட்கோட்டம், செங்கிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அய்யாசாமிப்பட்டி பிரிவு சாலை எதிரில் பகல் 11.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும்.
காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஊடகவியலாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரலை இணைப்பு (Live Feed) வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனி நபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள கழக நிர்வாகிகளுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகளின் வசதிக்காக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பங்கேற்பாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு BOX-களிலும், காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, 80% அளவில் மட்டுமே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.







