“வெற்றிப் பயணத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு திருமாவளவன் நன்றி!”

வெற்றிப் பயணத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தை கடந்த திமுக அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தவெக, தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

அதன்படி மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவாக்கப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், அக்.2-ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாள் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

இந்த நிலையில் அக்.2-ஆம் தேதியான நேற்று சென்னை கோயம்பேட்டில் வெற்றிப்பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதனிடையே இத்திட்டம் கூடுதலாக மாற்று திற்னாலிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வெற்றிப் பயணத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு அரசு வெற்றி பயணத்திட்டத்தின் மூலம் கட்டணமில்லா பேருந்து சேவை தற்போது பெண்கள் மற்றும் திருநர்களுக்கு விரைவு (Express), குறைந்த நிறுத்தங்கள் கொண்ட சேவை (LSS), சொகுசு(Deluxe) பேருந்துகளுக்கு நீட்டிக்கப்பட்டு இதனை முதலமைச்சர் விஜய் துவக்கி வைத்துள்ளது பாராட்டுக்குரியது.

பெண்கள், திருநர் போன்றே அரசின் சிறப்பு கவனம் தேவைப்படுகிற சமூகமான மாற்று திறனாளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கடந்த 09.09.2026 அன்று முதலமைச்சர் விஜய்யிடம் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கைக் வைக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்று நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த அறிவிப்புனை உறுத்திப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் இதற்கான அரசாணையினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.