தஞ்சாவூரில் மிட்டாய் தாத்தா என அன்போடு அழைக்கப்படும் 115 வயது நிரம்பிய முஹம்மது அபுதாஹிர் என்பவர் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்துகொண்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தஞ்சையில் உள்ள கீழ்வாசல் ஆடக்காரத் தெருவில் வசித்துவருபவர் 115 வயதான மிட்டாய் தாத்தா. இந்நிலையில் அப்பகுதியில் நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனையெடுத்து அப்பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி ஊழியர்கள் முடிவு செய்தனர்.
கொரோனா பரிசோதனை செய்துகொள்ளப் பலரும் தயங்கி நிலையில் மற்றவர்களுக்கு தன்நம்பியைக்கையூட்டும் விதமாக மிட்டாய் தாத்தா ‘முஹம்மது அபுதாஹிர்’ தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
பரிசோதனை செய்த மாநகராட்சி ஊழியர்கள் அவருடைய வயதை கேட்டுள்ளனர். அப்போது அவர் தனக்கு 115 வயது என கூறியுள்ளார். இதை கேட்டு ஆச்சரியமடைந்த ஊழியர்கள் மிட்டாய் தாத்தாவின் செயலை பாராட்டி கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

இது குறித்து பேசிய அவர், “கொரோனாவால் வீட்டிலேயே தேங்காய் வியாபாரம் செய்துவருகிறேன். கொரேனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணிவது நமக்கும் நல்லது மற்றவர்களுக்கும் நல்லது.
இப்போ எல்லாருக்கும் கொரோனா வருகிறது. இதனால் எனக்கு கொரோனா இருக்கா.. இல்லை.. என தெரிந்துகொள்ளப் பரிசோதனை செய்துகொண்டேன். ஆனால் எனக்கு கொரோனா இல்லை என சொல்லிவிட்டார்கள். எந்த வயதில் இருந்தாலும் அனைவரும் பயமில்லாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்” என வலியுறுத்துகிறார் மிட்டாய் தாத்தா.
தற்போது வீட்டிலேயே தேங்காய் வியாபாரம் செய்து அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துவருகிறார் மிட்டாய் தாத்தா. கொரோனாவுக்கு முன்பு இவர் தேங்காய் மிட்டாய்களை விற்பனைச் செய்து வந்துள்ளார். இதனால் அவர் மிட்டாய் தாத்தா என அன்போடு அழைக்கப்பட்டுவருகிறார்.







