சென்னை மாநகராட்சி உட்பட்ட 19 கொரோனா கண்காணிப்பு மையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் சாலையில் அமைந்துள்ள கேந்திர வித்தியாலய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரானா பரிசோதனை மையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல இடங்களில் கொரோனா மையங்களில் படுக்கைகள் உள்ளது என்றும், ஒரே வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளவர்கள் இதுபோன்ற மையங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் கொண்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிப்பது, அவர்களுக்கான ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
இதனையடுத்து கடந்த ஆண்டை விட தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றும் மக்கள் இதனை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது எனவும் எச்சரித்தார். மேலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ஊரடங்கு போடுவதன் பயன் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, “தொழில்துறை, சுகாதாரத்துறை இணைந்து வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டு வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை மாநகராட்சி உட்பட்ட 19 கொரோனா கண்காணிப்பு மையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும். அதில் 30 முதல் 40 செறிவூட்டக்கூடிய ஆக்சிஜன் கருவிகள் பொருத்தப்படும்” என்று கூறினார்.







