வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிப்பதா? அதிமுகவுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்

வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக அறிக்கை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்கள்…

வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக அறிக்கை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் 17.7.2021 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்

.தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் குழாய்ப் பதிக்கும் பணிகள் நடைபெற்றது குறித்து எதுவும் அறியாதது போலவும் இத்தகைய திட்டங்கள், தற்போதுதான் புதிதாக செயல்படுத்தப்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்க, அதிமுக ஒருங்கிணைப் பாளர், குழாய் பதிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது விந்தையாகவும் வியப்பாகவும் உள்ளது.

பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டங்களைப் பொறுத்த வரையில், நில உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும் கூடுதல் இழப்பீடு வழங்கியும் இத்திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எங்கெங்கெல்லாம் சாத்தியக் கூறுகள் உள்ளதோ அவ்விடங்களில் எல்லாம் சாலை ஓரமாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசால் வலியுறுத்தப்படுகிறது. இந்த அரசு விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அறிக்கையை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.

தங்களின் ஆட்சியில் குழாய் பதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை வசதியாக மறந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் இதுபோன்ற விஷமத்தனமான அறிக்கைகளை இனிமேலும் வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.