தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக அதிகரித்து தினந்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு பதிவானது. ஆக்சிஜன் தட்டுப்பட்டால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டதன் காரணமாக தற்போது நிலை ஓரளவு சீராகியுள்ளது.
இந்த நிலையில் ஆக்சிஜன் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“நான் வாழும் தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தான் உலகின் தூய்மையான ஆக்சிஜன் ஆகும். இது விற்பனைக்கு அல்ல. இலவச வினியோகம் தான். அந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை இன்று காலை சுமார் அரை மணி நேரம் ஆய்வு செய்தேன். அனைத்தும் மிகச்சரியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்று குறிப்பிட்ட ராமதாஸ், முழு விவரத்தையும் பின்னர் கூறியுள்ளார்.

“நான் சொல்வது உங்களுக்கெல்லாம் நன்றாக புரியும் என்று நினைக்கிறேன். நாம் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை மரங்களும், தாவரங்களும் தான் தருகின்றன. எங்கள் தோட்டத்தில் ஓங்கி வளர்ந்துள்ள மரங்களையும், தாவரங்களையும் தான் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் என்று குறிப்பிட்டேன்” என்று விவரித்துள்ளார். மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பதையே தன்னுடைய பதிவின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.







