தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் : டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு…!

தமிழ்நாடு அரசு சார்பில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டதிற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், 2026 தேர்தல் அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ மூலமாக தங்க மோதிரம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சரான பிறகு தாய் மாமன் தங்க மோதிர திட்டம் எப்போது தொடங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது.

இதனிடையே கடந்த ஜுன் 23 ஆம் தேதி தமிழ் நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், “அரசு மருத்துவமனைகளில் பிறக்கும், தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழக முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டதிற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று துவக்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.