சினிமா விமர்சனம்
டோரதி
மதுரையைச் சேர்ந்த இரண்டு உயிர் நண்பர்களின் நட்புக் கதை. அதில் ஒரு நண்பன் திருநங்கையாக மாற, இன்னொரு நண்பனின் மனநிலை எப்படி மாறுகிறது, அவன் என்ன செய்கிறான் என்பது கிளைமாக்ஸ். இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
1990களில் கதை நடக்கிறது. ரிஷிகாந்தும், சனந்தும் சின்ன வயதிலேயே இணைபிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள். அந்த வயதுக்கே உரிய ரவுசு செய்கிறார்கள். இருவரும் காதலில் விழுகிறார்கள். இரண்டு காதலும் தோல்வி அடைகிறது. சனந்த் வீட்டுக்கு அண்ணியாக வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஒருநாள் அவர் திடீரெனத் தூக்கிட்டு தற்கொலை செய்கிறார். சனந்த் வேறு மாதிரி மாறுகிறார். ‘நான் பெண்மைத் தன்மையை உணர்கிறேன்’ எனச் சொல்லி, சேலை கட்டிக்கொண்டு திருநங்கையாக மாறுகிறார். ‘‘இது அவமானம், ஊருக்குத் தெரியக்கூடாது’’ என நினைக்கும் அவரது குடும்பத்தினர், நண்பன் ரிஷிகாந்த் மூலமாக சனந்தைக் கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள். குஜராத்தில் நடக்கும் ஒரு திருநங்கைத் திருவிழாவில் கொண்டுபோய் விட சனந்துடன் லாரியில் பயணம் செய்கிறார் ரிஷிகாந்த். அந்தப் பயணத்தில் நடப்பது என்ன? கடைசியில் நண்பனைக் கொன்றாரா? என்ன நடந்தது என்பது உலக சினிமா ரசிகர்களை மனதில் வைத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மாறுபட்ட தமிழ்சினிமா ‘டோரதி’.

தமிழில் இப்படிப்பட்ட கதைகளில் நட்புக் கதை வந்தது இல்லை. இப்படிப்பட்ட கிளைமாக்ஸ் வந்ததே இல்லை. திருநங்கைகள் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும், இந்த மாதிரி உணர்வுபூர்வமாக யாரும் சொல்லியதே இல்லை. ரிஷிகாந்த், சனந்த் இளமைப் பருவம், அவர்களுக்குள் நட்பு உருவாகும் விதம், இருவரும் மதுரையில் செய்யும் சண்டித்தனம், அடிதடி என முதல் பாதி நகர்கிறது. அந்தக் கால மதுரையை அவ்வளவு நேர்த்தியாகக் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திரு. அந்தக் குடும்பத்தில் கீர்த்தி சுரேஷ் வந்தவுடன் கதை மாறுகிறது. அண்ணிக்கு உதவியாக இருக்கிறார் சனந்த். அவருடன் இணைந்து வீட்டு வேலை செய்கிறார், பாத்திரம் கழுவுகிறார். அவர் இறந்தவுடன் கதறுகிறார். கொஞ்ச நேரம் வந்தாலும் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம், அவர் பேசும் வசனம், அவர் சொல்லும் விஷயங்கள் நச்.
கீர்த்தி சுரேஷுக்கு கவுரவ வேடம், ஹீரோக்களுக்கு ஜோடி இல்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்தை மறக்க முடியாது. கதைப்படி அவரது பெயர்தான் டோரதி. அந்தப் பெயர் கிளைமாக்ஸிலும் இன்னொரு இடத்தில் வந்து கைதட்டல்களை அள்ளுகிறது. இன்னொரு ஹீரோவாக நண்பனாக வரும் ரிஷிகாந்துக்கு முக்கியமான படம் இது. அந்த மதுரைக்கார கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். முதலில் நட்புடன் பழகுபவர், நண்பன் திருநங்கையான பிறகு அவர் காண்பிக்கும் கோபம், அந்த லாரிப் பயணத்தில் நடந்துகொள்ளும் விதம் அருமை. குறிப்பாக, கிளைமாக்ஸில் ரிஷிகாந்த் மீண்டும் குஜராத் செல்லும் காட்சி, அந்த இளையராஜா பாடல் செம. முதற்பாதியில் அடக்கி வாசிக்கும் சனந்த், இரண்டாம் பாதியில் அந்தத் திருநங்கை கெட்அப்பில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அவர் வெட்கப்படுவது, அவமானப்படுவது, கோபப்படுவது, நண்பனின் புறக்கணிப்பால் தவிப்பது எனப் பல இடங்களில் மனதில் நிற்கிறார். கிளைமாக்ஸில் இன்னும் ஆச்சரியம் அளிக்கிறார்.
சனந்த் அப்பாவாக வரும் முத்துகுமார் சரியான நடிப்பு, சரியான வில்லத்தனம். விசில் அடித்துக்கொண்டே அந்த வயதான கெட்அப்பில் கலக்கியிருக்கிறார். திருநங்கை ஜீவாவுக்கும் வலுவான கதாபாத்திரம். பல திருநங்கைகளின் குரலாக, முகமாகப் படத்தில் இருக்கிறார். சனந்த் அண்ணனாக வரும் சவுந்தர்ராஜாவும், அடியாளாக வரும் ராமும் பல இடங்களில் கலக்கியிருக்கிறார்கள்.
படத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வது அல்லது உயிர் கொடுப்பது இளையராஜாவின் இசைதான். கல்யாண விருந்து பாடல் ஆட்டம் போட வைக்கிறது. கிளைமாக்ஸில் வரும் முத்து மணி பாடல், அதன் வரிகள், அந்தப் பாடல் வரும் இடம், மீனாட்சி என இளையராஜா பாடும் குரல் படத்தின் கருவைச் சொல்லாமல் சொல்லி பீல் பண்ண வைக்கிறது. அந்தப் பாடல் இல்லாவிட்டால் அந்தக் காட்சியே வேறு மாதிரி மாறியிருக்கும். அதேபோல், பல இடங்களில் முந்தைய ஹிட் பாடல்களைப் பின்னணி இசையாகக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. அந்த இடங்கள் ரசிகர்களை பின்னோக்கி, அந்த வசந்த காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.
முதற்பாதி மதுரை என்றால், பிற்பாதி குஜராத், வட இந்தியா, லாரிப் பயணம் என இன்னொரு திசையில் நகர்கிறது. இரண்டுமே விறுவிறுப்பாக ரசிக்கும்படி இருக்கிறது.
மதுரை, அடிதடி, குடும்பம், பிரச்னை, நட்பு என வழக்கமான விஷயத்தைச் சொல்லாமல், திருநங்கைகளின் வாழ்க்கை, அவர்களின் வலி, வேதனை, காதலைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அதை விரசம், முகம் சுளிப்பு இல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆனாலும், ஒரு சிலருக்கு இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். கிளைமாக்ஸ் பிடிக்காமல் போகலாம். முகத்தைத் திருப்பிக்கொள்ளலாம். உலக சினிமா ரசிகர்கள், மாற்று சினிமாவை விரும்புகிறவர்களுக்கு டோரதியைப் பிடிக்கும். ஏ சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகள் பார்க்க முடியாது. பெண்கள், கலாச்சாரப் பிரியர்கள், காதலை வேறு மாதிரி பார்ப்பவர்கள் படம் பார்த்துவிட்டு நிறைய விமர்சனங்கள் வைக்கலாம். ஆனாலும், தமிழ்சினிமாவில் முக்கியமான படைப்பு டோரதி.
மீசையமுறுக்கு 2
ஹிப்ஹாப் ஆதி இயக்கம், இசை, நடிப்பில் வந்திருக்கும் ஒரு இசைப்படம். தாத்தா, அப்பாவைப் புறக்கணிக்கிறது ஒரு கூட்டம். அவர்களிடம் திறமை இருந்தும் சிலரால் அவர்கள் தோற்கிறார்கள். கானா பாடல், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மதிப்பு கிடையாது. கர்நாடக சங்கீதப் பாடகர்களுக்கு, பணக்காரப் பின்னணி கொண்ட இசைக் கலைஞர்களுக்குத்தான் மரியாதை என்ற ரீதியில் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை உடைத்து தானும் ஜெயித்து, அப்பா, தாத்தாவையும் எப்படி ஜெயிக்கிறார் பேரன் ஆதி என்பது படக்கதை. தாத்தா, மகன், பேரன் என்று 3 பேருமே ஆதிதான். முதல் காலகட்டக் கதை 1970களில் நடக்கிறது. அதில் கானா பாடகராக ஆதியும், அவரது மனைவியாக சைத்ராவும் வருகிறார்கள். அந்தக் காலகட்ட போர்ஷன் கியூட். அடுத்து பேரன் ஆதி சம்பந்தப்பட்ட போர்ஷன் வருகிறது. அவர் சினிமா ஆசையில் சுற்றுகிறார். நிறைய அவமானப்படுகிறார். ஒரு கட்டத்தில் பஸ் டிரைவராக இருக்கும் தன் அப்பாவும் பெரிய கானா பாடகர் என அறிகிறார். அவர் பாதிக்கப்பட்டதை உணர்கிறார். தனது மகன் எதிர்காலத்துக்காக அவர் தனது கனவைத் தியாகம் செய்கிறார்.

அந்த போர்ஷனில் ஆதி ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்திருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள், குடும்பப் பிரச்னைகள், ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் படத்தை இன்னொரு படி கொண்டுசெல்கின்றன. ரம்யாவின் ஆட்டமும் பாட்டமும் சூப்பர். கடைசியில் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, அப்பா, தாத்தாவையும் கூட்டணியில் வைத்து இசைத்துறையில் ஆதி ஜெயிப்பதாகப் படம் முடிகிறது. பேரன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் அதிகம். அதில் யோகிபாபு, ஹர்சத், வரதராஜன் என ஏகப்பட்ட நடிகர்கள் வருகிறார்கள். சில காமெடி சீன், சென்டிமென்ட் சீன் செட்டாகி இருக்கிறது. கதையில் வரும் சினிமா சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பு.
இந்தக் கால ஆதியின் ஜோடியாக கெட்டிகா சர்மா வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட சீன்கள் கலர்ஃபுல். ஆதி நண்பனாக வந்து கலகலப்பு ஊட்டுகிறார் ஹர்சத் கான். அந்தக் காட்சிகள் படத்திற்கு பிளஸ். நாசர், பகவதி பெருமாள் எதிர்த் தரப்பு பார்ட்டிகளாக வருகிறார்கள். முதற்பாதியில் இழுக்கும் கதை, பிற்பாதியில் வேகமெடுக்கிறது. தாத்தா, அப்பா, மகன் ஆதியாக வந்தாலும், அவர்களின் நிகழ்காலக் காட்சிகளில் தாத்தாவாக கருணாஸ், அப்பாவாக பாபா பாஸ்கரை காண்பிக்கிறார்கள். அது புதுசாக இருக்கிறது. ஆதி படங்களில் பாடல், உற்சாகத்துக்குக் குறை இருக்காது. இதிலும் அப்படி. எல்லா இசையும் ஒன்றுதான். எல்லாக் கலைஞர்களிடமும் திறமை இருக்கிறது என்பதை ஏகப்பட்ட சீன், டயலாக் மூலமாகச் சொல்கிறார் ஆதி. முதற்பாகம் அளவுக்கு இல்லாவிட்டாலும், மீசையமுறுக்கு 2 இளைஞர்களை, இசைக்கலைஞர்களைக் கவரும்.
லெனின்பாண்டியன்
மணல் திருடும் கும்பலிடம் தனது ஆட்டைப் பறிகொடுத்த கங்கை அமரன், நீதி கேட்டு போலீஸ் ஸ்டேஷன் போகிறார். அங்கே இருக்கும் அடாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட் நடவடிக்கை எடுக்காமல் கங்கை அமரனை அவமானப்படுத்துகிறார், அடிக்கிறார். மணல் திருட்டைத் தடுக்க நினைக்கும் விஏஓ அர்ச்சனாவையும் மணல் மாஃபியாவான யுகேந்திரன், ஆடுகளம் நரேன் கொல்கிறார்கள். கடைசியில் கோர்ட்டுக்குச் செல்கிறார் கங்கை அமரன். நீதிபதி ஜார்ஜ் மரியான் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை கங்கை அமரனுக்குக் கொடுக்கச் சொல்கிறார். ஸ்டேஷனில் போலீசாக இருக்கும் தர்ஷன் கணேசன் அந்தப் பணிக்கு வருகிறார். அவரை மீறி கங்கை அமரனை வில்லன் டீம் கொன்றதா? மனைவிக்கு ஆபரேஷன், பணப் பிரச்னைகளால் தவிக்கும் தர்ஷன் வில்லன் டீமிடம் விலை போனாரா? கடைசியில் என்ன நடந்தது என்பது டி.டி.பாலசந்திரன் இயக்கிய இந்தப் படத்தின் கதை. இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு அக்மார்க் கிராமத்துக் கதை. அதுவும் இளையராஜா இசையில். வயதான கதாபாத்திரத்தில், தனது ஆட்டை இழந்து தவிப்பவராக அறிமுகமாகும் கங்கை அமரன் ஆரம்பம் முதல் கடைசிவரை நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அவருக்கும் மனைவி ரோஜாவுக்குமான பாச சீன்கள் படத்தின் ஹைலைட். போலீஸில் அவர் அடிபடுவது, கோர்ட்டில் தைரியமாகப் பேசுவது, மனைவியிடம் குடை காளான் சாப்பாடு கேட்பது, கடைசியில் சில உண்மைகளை உணர்ந்து தவிப்பது எனப் படம் முழுக்க கலக்கியிருக்கிறார். அவர் மனைவியாக வரும் ரோஜாவும் மனதில் நிற்கிறார். ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் அவருக்கும் இது நல்ல கதை. போலீஸ்காரராக அறிமுகமாகியிருக்கிறார் சிவாஜி பேரன் தர்ஷன். மற்றவர்களால் அவமானப்படும் இடங்கள், ஸ்டேஷனில் குறுகி நிற்கும் இடங்கள், மனைவியிடம் கோபப்படும் இடங்கள், கடைசியில் வில்லன்களைத் துவம்சம் செய்யும் இடங்கள் அவர் நடிப்புக்கு சாட்சி. அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸில் பாண்டிமுனி பாடல் ஒலிக்க, அவர் ஆக்ஷன் அவதாரம் எடுப்பது சிறப்பு. வில்லன்களாக யுகேந்திரன், ஆடுகளம் நரேன், கெட்ட போலீஸாக போஸ் வெங்கட் டார்ச்சர் செய்கிறார்கள். தர்ஷன் மனைவியாக வரும் ஷ்ரிதாவுக்கு நல்ல கதாபாத்திரம். கணவர் பாசத்தில் அவர் முத்திரை பதித்திருக்கிறார். கணவருடன் மனஸ்தாபம் சீன்களில் இயல்பாக நடித்திருக்கிறார். ரோஜாவின் கிளைமாக்ஸ் சீன் மனதை உலுக்குகிறது.
படத்தின் பெரிய பலம் இளையராஜாவின் பின்னணி இசை, பாடல்கள். நீதிபதி ஜார்ஜ் மரியான் ஏற்றத்தாழ்வு குறித்து ஒரு நறுக் வசனம் பேசுவார். அதைத் தொடர்ந்து வரும் இளையராஜா இசை ஏதேதோ செய்கிறது. பல இடங்களில் ‘முதல் மரியாதை’ ‘பூங்காற்று’ பாடலைப் பின்னணி இசையாகக் கொடுத்திருக்கிறார். அதுவும் அழகு. கிளைமாக்ஸில் வரும் ‘பாண்டிமுனி’ பாடலில் கோபம் தெரிகிறது. ஒரு கிராமத்தை, அங்குள்ள மனிதர்களை, அங்கு நடக்கும் அக்கிரமத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சட்டம் அனைவருக்கும் சமம். சட்டத்தால் பல மாற்றங்களைக் கொண்டுவரலாம் எனக் காண்பித்திருக்கிறார். நல்ல கதை, நல்ல நடிகர்கள், நல்ல கரு ஆகியவற்றால் லெனின்பாண்டியன் மனதில் நிற்கும் படமாக இருக்கிறது.
தி பாரடைஸ்
பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக இருக்கிறார்கள் சவாரி மக்கள். அந்த இனத்தைக் கொத்தடிமைகளைப் போல் பயன்படுத்தி, தனது சாராய பிஸினஸை வளர்க்கப் பயன்படுத்துகிறது ஜமீன்தார் குடும்பம். அந்த இனத்தில் பிறக்கும் நானிக்கும், ஜமீன்தார் மோகன்பாபுவுக்கும் பகை வளர்கிறது. தனது இனத்துக்காகப் போராடுகிறார் நானியின் அம்மா சோனாலி குல்கர்னி. இந்தியக் குடிமக்களாகக் கூட அவர்களை மாற்ற விடாமல் தடுக்கிறது வில்லன் கூட்டம். இந்தத் தடைகளை மீறி அம்மாவும் மகனும் இணைந்து அந்த இனத்துக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தார்களா? இந்தியக் குடிமக்களாக மாற்றினார்களா என்பது ‘பாரடைஸ்’ படக்கதை. ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார்.

அந்த சவாரி இனத்தின் பின்னணி, அவர்கள் அடிமைகள் ஆன கதை, அவர்கள் அனுபவிக்கும் சித்ரவதைகள், அவர்களை ஆட்டிப்படைக்கும் வில்லன் கூட்டம் போன்ற பின்னணி மனதை உலுக்குகிறது. மாலிக் ஆக வரும் மோகன்பாபு, அவரது மகன் வில்லத்தனம் பயப்பட வைக்கிறது. அதை எதிர்க்கும் நானியின் ஹீரோயிசம், கோபம், சண்டை படத்தை ஆக்ஷன் விருந்தாக்குகிறது. நானியின் கெட்அப், ஃபைட் சீன் பிளஸ். என்ன, வன்முறை, சண்டை, ரத்தம், கொலை அதிகம். திரைக்கதையில் நேர்த்தி, கமர்ஷியல் விஷயங்கள் குறைவு. அம்மா சென்டிமென்ட் படம் என்றாலும், அம்மாவைத் தவறாகக் காண்பிப்பது, அதற்கான வசனங்கள் வைத்திருப்பது உறுத்தல். கவர்ச்சியாக வருகிறார் கயாடு லோஹர். ஒரு பாடலுக்கு ஆடுகிறார் கீர்த்தி சுரேஷ செத்துக்கொண்டே இருப்பதும் ஓவர். படத்தின் டோன், பின்னணி புதுசு. ஆனால் அதைச் சொல்வதில் சொதப்பியிருக்கிறார் இயக்குநர். சவாரி மக்களின் சோகம், அனுபவிக்கும் கொடுமை ஒரு கட்ட். மேலும் இசை, பாடலில் அனிருத் முயற்சி செய்திருக்கிறார்.
படம் முழுக்க சண்டை, வம்பு, பிரச்னைகள் வந்துகொண்டே இருப்பதும், சிலர் ரத்தம் வடிய வடிய செத்துக்கொண்டே இருப்பதும் ஓவர். படத்தின் டோன், பின்னணி புதுசு. ஆனால் அதைச் சொல்வதில் சொதப்பியிருக்கிறார் இயக்குநர். சவாரி மக்களின் சோகம், அனுபவிக்கும் கொடுமை ஒரு கட்டத்தில் ரசிகர்களையும் தொற்றிக்கொள்வது படத்தின் மைனஸ். நானி படமாக இருந்தாலும் கமர்ஷியல், கலர்ஃபுல் விஷயங்கள் குறைவு.
தி கிராண்ட் மாஸ்டர்
வெற்றிச் செழியன் இயக்கத்தில் அபர்ணதி, மாஸ்டர் அஷ்வின், லிங்கேஷ், சுரேஷ் மேனன் உட்பட பலர் நடித்திருக்கும் படம். கணவரை இழந்த துப்புரவுப் பணியாளரான அபர்ணதிக்கு தனது ஒரே மகன் வக்கீல் ஆக வேண்டும் என ஆசை. அவனோ சதுரங்க விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறான். அந்த விளையாட்டில் சாதித்து கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அவன் லட்சியம். தாய் செய்யும் தொழிலை காரணமாக வைத்து, மகனை மற்றவர்கள் ஒதுக்குகின்றனர். அதிகார பலம் மிக்க சுரேஷ் மேனன் கேம் ஆடுகிறார். ஒரு கட்டத்தில் மகனின் கனவை நிறைவேற்றுவதற்காக தானே சதுரங்கப் பயிற்சியைக் கற்றுக்கொடுத்து, அவனை நிராகரித்தவர்களுக்கு முன்னால் அவன் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று போராடுகிறார் அபர்ணதி. ஒரு காலத்தில் அவரே சதுரங்க வீராங்கனை. கடைசியில் அந்தத் தாயின் போராட்டம் ஜெயித்ததா? அந்தப் போராட்டம் எப்படி வெல்கிறது என்பது கதை. அந்தக் கதாபாத்திரத்துக்குப் பக்காவாகப் பொருந்தி, பல சீன்களில் தனது நடிப்பு, பாசத்தால் கலக்கியிருக்கிறார். அவருக்கும், கணவர் லிங்கேஷுக்கும் இடையேயான ஃபிளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதால், காட்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை போல இல்லாமல் இயல்பாக நகர்கின்றன. அபர்ணதியின் கணவராக வரும் லிங்கேஷ், மகன் அஷ்வின் ஆகியோரின் நடிப்பும் இயல்பாக இருக்கிறது. தினேஷ் ஆண்டனியின் இசை கதைக்கு பலம். விளையாட்டை வெறும் வெற்றி – தோல்வி என்ற கோணத்தில் அணுகாமல், அந்தத் துறைக்குள் இருக்கும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் பார்க்க வேண்டும் என்கிறார் இயக்குநர். விளையாட்டில் சாதி, பணம், அதிகாரம் இந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. கடைசியில் விளையாட்டில் இந்தத் தடைகள் கூடாது என்ற மனநிலை பார்வையாளர்களுக்கு வருகிறது. சில குறைகள் இருந்தாலும், சொல்ல வரும் கருத்தால், நடிப்பச் சிறுவன் சமூகப் பாகுபாடுகளை மீறி ஜெயித்தானா என்பது ‘தி கிராண்ட் மாஸ்டர்’ கதை.

விளையாட்டின் பின்னால் இருக்கும் பொருளாதாரத் தடைகள், சமூகத் தடைகளை ஒரு தாயின் பாசப் போராட்டம் எப்படி வெல்கிறது என்பது கதை. அந்தக் கதாபாத்திரத்துக்குப் பக்காவாகப் பொருந்தி, பல சீன்களில் தனது நடிப்பு, பாசத்தால் கலக்கியிருக்கிறார். அவருக்கும், கணவர் லிங்கேஷுக்கும் இடையேயான ஃபிளாஷ்பேக் சீன்கள் புதுமை. வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை, அதை மாற்ற வேண்டும் என்ற இயக்குநர் வெற்றிச் செழியனின் பார்வை நன்றாகத் தெரிகிறது.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதால், காட்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை போல இல்லாமல் இயல்பாக நகர்கின்றன. அபர்ணதியின் கணவராக வரும் லிங்கேஷ், மகன் அஷ்வின் ஆகியோரின் நடிப்பும் இயல்பாக இருக்கிறது. தினேஷ் ஆண்டனியின் இசை கதைக்கு பலம். விளையாட்டை வெறும் வெற்றி – தோல்வி என்ற கோணத்தில் அணுகாமல், அந்தத் துறைக்குள் இருக்கும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் பார்க்க வேண்டும் என்கிறார் இயக்குநர். விளையாட்டில் சாதி, பணம், அதிகாரம் இந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. கடைசியில் விளையாட்டில் இந்தத் தடைகள் கூடாது என்ற மனநிலை பார்வையாளர்களுக்கு வருகிறது. சில குறைகள் இருந்தாலும், சொல்ல வரும் கருத்தால், நடிப்பால் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ தனித்து நிற்கிறது.
மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்




