தென் அமெரிக்க நாடான ஈக்வடார் மற்றும் பெரு ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈக்வடார் நாட்டில் உள்ள குவாவாஸ் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து, மக்கள் அலறியடித்து கட்டடங்களை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இந்நிலையில், அங்கு சில கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் அவற்றின் சில பகுதிகள் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் சிக்கி ஈக்வடாரில் 14 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கி 125-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈக்வடாரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கதின் அதிர்வு பெரு நாட்டிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக பெரு நாட்டின் டொம்பஸ் பகுதியில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்த தாக்கத்திலிருந்து உலக மக்கள் வெளிவராத நிலையில் தற்போது தென்அமெரிக்க நாடான ஈக்வாடாரில் 6.8 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.







