மொட்டைமாடி கிரிக்கெட் to சர்வதேச டென்னிஸ்; யார் இந்த சாய் சம்ஹிதா?

உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், சென்னை மீதான சர்வதேச ஊடகங்களின் பார்வை சற்று கூர்மையாகிக் கொண்டே செல்கிறது.   நட்சத்திரங்கள் பலர் சங்கமிக்கும் உலக மகளிர்…

உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், சென்னை மீதான சர்வதேச ஊடகங்களின் பார்வை சற்று கூர்மையாகிக் கொண்டே செல்கிறது.

 

நட்சத்திரங்கள் பலர் சங்கமிக்கும் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஏற்கனவே சர்வதேச அளவிலான வீராங்கனைகள் 21 பேர் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மீதம் இருக்கும் முக்கிய போட்டிகளுக்கான பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யும் வகையில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அவ்வாறு தகுதி சுற்று ஆட்டங்கள் ஆடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய பெண்களில், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியை கொடுத்தாலும், தமிழ்நாட்டில் இருந்து ஒரே ஒரு பெண் தான் விளையாடுகிறார் என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் கிரிக்கெட்டிற்கு அடுத்து, தடகளம், ஹாக்கி, கால்பந்து, குத்துச்சண்டை, கபடி, சிலம்பம் உள்ளிட்டவை தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இறகுப் பந்து, பூப்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்டவை அவ்வப்போது பருவத்திற்கு ஏற்றார் போல மாணவர்களுக்கான ஆர்வத்தை பொறுத்து வெளிபட்டாலும், டென்னிஸ் விளையாட்டை பொறுத்தவரை எத்தனை ஆடுகளங்கள் இருக்கின்றன என்பது கூட நம்மில் பலருக்கு தெரியாத வண்ணமே இருக்கிறது. ஏனெனில் டென்னிஸ் விளையாட்டு ஒரு பணக்கார விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது. நிச்சயம் அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்பது உண்மையாக இருந்தாலும், டென்னிஸ் மீதான மோகம் அத்தகைய எலைட் விளையாட்டு குறித்த புரிதல் இருப்பவர்களால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இருப்பினும் முயற்சிதான் முழு மன நிறைவான வெற்றியும், தவிர்க்க முடியாத பல உயரங்களையும் நிலைப்படுத்தும் என்பதற்கு சான்று. அத்தகைய முயற்சியின் உருவாக இருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சம்ஹிதா சம்ரிதி.

யார் இந்த சம்ஹிதா?

என்று அவரிடமே கேட்டபோது; “நான் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தேன், எனது சிறு வயதில் என் வீட்டு மொட்டை மாடியில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது என் தாத்தா தன்னிடம், “நீ ஏன் டென்னிஸ் விளையாட கூடாது” என்று கேட்ட கேள்வி தான் என்னை டென்னிஸ் விளையாட தூண்டியது. நான் கடந்த 14 வருடங்களாக தமிழ்நாட்டின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருக்கிறேன். எனக்கு படிப்பு அவ்வளவாக வராது. குறும்புத்தனம் அதிகம் செய்யக்கூடிய பெண்ணாக வளர்ந்த நான், 75% சதவிகித அடிப்படையில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறேன்.” என்றார்

 

விளையாட்டில் கெட்டிக்காரியாக வேண்டும் என்ற எனது எண்ணத்திற்கு, என் பெற்றோர் உறுதுணையாக நிற்பது என் வளர்ச்சிக்கான கரணம். நான் மிகவும் கஷ்டப்படுகின்ற குடும்பத்தை சேர்ந்த பெண். ஆரம்ப காலம் முதலே என் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கியவர் என் தந்தை தான். திருவல்லிக்கேணியில் இருந்து டூ வீலர்ல அழைச்சிட்டு பாடி வரை கூட்டிட்டு போவாரு என் தந்தை. மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறேன். அப்படிதான் என் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டில் டென்னிஸ் விளையாட்டில் தெரிய ஆரம்பித்தது, தர வரிசையிலும் உயர ஆரம்பித்தது.

எத்தனை வருடங்களாக தமிழ்நாட்டின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருக்கிறீர்கள்? எப்படி இது சாத்தியம்?

நான் எட்டரை வயது முதலே டென்னிஸ் விளையாடி வருகிறேன். 14 வயதிற்கு உட்பட்டவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டது முதலே நான் தமிழ்நாடு நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்து வருகிறேன். அப்போதே இந்தோனேசியா டென்னிஸ் தொடரில் இந்தியா சார்பில் விளையாட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின் U16 தேசிய சாம்பியன், U18 தேசிய சாம்பியன், தேசிய அளவில் முதல் ஐந்து நிலை வீராங்கனையாக இருந்தேன். அதற்கு பின்னும் நான், தேசிய அளவிலான டென்னிஸ் தரவரிசையில் முன்னாள் 8 ஆம் நிலை வீராங்கனையாக இருந்து வந்தேன். ஆனால் கடந்த 3 வருடங்களாக கொரோனா கால கட்டத்தில் தரவரிசையில் சற்று சரிவு நேர ஆரம்பித்தது. இருந்தாலும் இந்திய அளவில் நான் 14 வது வீராங்கனையாக இருக்கிறேன். தமிழ்நாட்டில் முதலிடம் மற்றும் தமிழ்நாட்டின் நம்பிக்கைக்குரிய வீராங்கனையாக பார்க்கப்படுகிறேன்.

 

சாம்ஹிதாவுக்கு டென்னிஸ் விளையாட்டில் முன் உதாரணம் என்றால் அது யார்?

பொதுவாகவே எனக்கு ரோஜர் பெடரர் என்றால் மிகவும் பிடிக்கும். நானும் அவரை போல தான் ஒற்றை கையில் விளையாடுவேன். அவர் விளையாட கூடிய அனைத்து ஸ்டயிலிலும் விளையாடுவேன். அவரை பார்த்து தான் எனக்கும் ஸ்டயிலிஷ் பிளேயராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இந்தியா டென்னிஸ் வீராங்கனைகளில் மிகவும் ஸ்டயிலிஷ் ஆக விளையாட கூடிய பெண் என்று என்னை நிறைய பேர் நல்ல விதத்தில் பலமுறை விமர்சித்து இருக்கிறார்கள். உங்கள் விளையாட்டு வாழ்கையில் நீங்கள் கஷ்டப்பட்ட தருணம் எது? பொருளாதார ரீதியில் எவ்வாறு கடந்து வந்தீர்கள்?

நான் சில போட்டிகளில் பங்கேற்க பல மாநிலங்களுக்கு பயணிக்கும் போது, 32 மணி நேரம், 48 மணி நேரம் என பல மணி நேரங்கள் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்து போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்ற தருணம் எல்லாம் என்னால் மறக்க முடியாது. அது குறித்து வருத்தப்படும் அதே நிலையில், நான் வெற்றிபெற்ற தருணங்களை நினைத்து பார்க்கும் போது, கடினமான சூழல் எல்லாம் மறந்துவிடும். நிச்சயமாக இந்தியாவில் ஒரு விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனையாக இருப்பது மிகவும் கடினமான ஒன்று.

 

டென்னிஸ் மிகவும் கஷ்டமான விளையாட்டு, “காசு இல்லனா டென்னிஸ் விளையாட முடியாது”. நல்ல திறமையான போட்டியாளர்களுக்கு அரசு நிட்சயம் உதவி புரிய வேண்டும். வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெறுவதற்கும், போட்டிகளுக்காக பயணிப்பதற்கும் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை நிறைய செலவாகும். எனவே தமிழ்நாடு அரசு என்னை போன்ற ஒரு நிலைக்கு வந்த போட்டியாளர்களுக்கு உதவினால், மேலும் சர்வதேச அளவில் வெற்றி பெறவும், இலட்சியங்களை தொடவும் உறுதுணையாக இருக்கும். கொரோனா காலகட்டத்தில் எனக்கு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும், போட்டிகளில் பங்கேற்கவும் பொருளாதார நெருக்கடி இருந்தது. விசா கிடைக்கவில்லை. அதனால் சற்று மன உளைச்சலை சந்தித்தேன். அதன் பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து, நிறைய போட்டிகளை சந்தித்து வெற்றி பெற்றேன். சமீபத்தில் தேசிய மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டம், ஐ.டி.எப் மகளிர் இரட்டையர் பட்டம் என பல போட்டிகளில் வென்றேன்.


சென்னையில் முதல்முறை மகளிருக்கான சென்னை ஓபன் போட்டியில் உங்களுக்கான வாய்ப்பு எப்படி?

நான் எப்போதும் கனவு கண்டு கொண்டே இருப்பேன். சென்னையில் பிறந்து, சென்னையில் ஒரு சர்வதேச போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று, அது இப்போது நினைவாக இருக்கிறது. அதற்காக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பல வருடங்களாக எனக்கு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். ஆனால் இன்னும் கூட தமிழ்நாடு அரசு எனக்கு உதவி செய்திருந்தால் நான் மேலும் வளர்ச்சி கண்டிருப்பேன். எனது வருங்கால வளர்ச்சிக்கு எனக்கு உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.