உயிரிழந்த தாயை மூன்று சக்கர நாற்காலியில் வைத்து மயானத்துக்கு கொண்டு சென்ற மகன் – மணப்பாறையில் பரபரப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 74 வயது தாயை மூன்று சக்கர நாற்காலியில் வைத்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மயானம் வரை மகன் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை…

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 74 வயது தாயை மூன்று சக்கர நாற்காலியில் வைத்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மயானம் வரை மகன் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாரதியார் நகரில் வசித்து வந்தவர்
பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி. 74 வயதாகும் மூதாட்டி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கை, கால்கள் செயலிழந்து பாதிக்கப்பட்டிருந்துள்ளார். அத்துடன் படுத்தபடுக்கையாக இருந்த மூதாட்டி தோல் நோயால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது மகன் முருகானந்தம் பராமரிப்பில் இருந்து வந்த மூதாட்டி இன்று காலை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து தோல் நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்ய யாரும் வரமாட்டார்கள் என கருதிய மகன் தனது இல்லத்தில் இருந்து மூன்று சக்கர நாற்காலியில் உயிரிழந்த தாயை அமர வைத்து செவலூர் பகுதியில் இருக்கும் நகராட்சி மயானம் வரை 4 கி.மீ. தொலைவிற்கு தள்ளிச் சென்று எரியூட்டியுள்ளார்.

வீட்டிற்கு சற்று தொலைவில் மாவட்ட தலைமை மருத்துவமனை இருந்தும் உயிரிழந்த உடல் மூன்று சக்கர நாற்காலில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.