தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை.
ஓணம் பண்டிகையையொட்டி சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் கேரள மக்கள் குடும்பத்துடன் வழிபாடு நடத்தினர். கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையாக ஓணம் பண்டிகை, ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தென் தமிழகத்தில் இன்று “அறுவடைத் திருநாள்” என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சென்னையில் வசிக்கும் கேரள மக்கள் ஏராளமானோர் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு மேற்கொண்டனர். 
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கேரள மாநிலத்தின் பாரம்பரிய வழக்கப்படி செண்டை மேளம் ஒலிக்க, வெள்ளை ஆடை அணிந்து வந்த மாணவிகள், மகாபலி ராஜாவை வரவேற்கும் விதமாக கல்லூரி வாசல்களில் அத்தப்பூ கோலமிட்டு அசத்தினர். மேலும் கேரள உணவுகளை தங்கள் வீடுகளில் சமைத்து வந்து விற்பனை செய்தும், உற்சாக நடனம் ஆடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதே போன்று, குன்னூர் ராணுவ முகாமில் நடைபெற்ற ஓணம் திருவிழாவில் செண்டை மேளம் முழங்க நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், ராணுவ ஓணம் திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர். பாரம்பரியமான செண்டை மேளம் முழங்க, ராணுவ வீரர்களின், ஈட்டி, கம்பு, போர்வாள், களரி உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஓணம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாவேலி மன்னன் மற்றும் வாமணன் நடனமாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
நாகர்கோவில் ஆதிபராசக்தி கோயிலில் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு, பாரம்பரிய உடையணிந்து நடனமாடி கொண்டாடினர். கேரளாவுக்கு அருகாமையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டப்பட்டு வருகிறது. அதன்படி, நாகர்கோவில் அருகே உள்ள ஆதிபராசக்தி கோயிலில் 18 வகை சிறப்பு அபிஷேகத்துடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.
மேலும், பெண்கள் கேரள பாரம்பரிய ஆடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு, அதில் நெல் பரை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோன்று குமரி மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் ஒன்றிணைந்து ஆடல், பாடலுடன் கரகாட்டமும் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டினர்.
கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதாக கேரள மக்கள் தெரிவித்தனர். மேலும், குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறை அளித்த தமிழ்நாடு அரசிற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.







