கோயில்களின் வருவாயை பெருக்க அதன் ஆக்கிரமிப்பு நிலங்கள் பயன்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை செளகார்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் பைராகிமடம் வெங்கடேச பெருமாள் கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், “பழமையான திருக்கோயில்களில் கல்வெட்டுகள் தரையிலேயே பதிக்கப்பட்டுள்ளன. அதில் கோயில் சொத்துக்களின் விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. திருக்கோயில்கள் சொத்துக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆவடியில் பைராகிமட கோவிலுக்கு சொந்தமான 142 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஓரிரு நாட்களில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
மேலும், “எந்த இடத்தில் ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருந்தாலும் அவை கண்டிப்பாக மீட்கப்படும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் செய்து தரப்படும். கோயில்களின் நில ஆக்கிரமிப்புகள் அறம் வளர்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படும். திருக்கோயில்களின் வருவாயை பெருக்க இந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் பயன்படுத்தப்படும். மக்களுக்கு தேவையான பணிகள் செய்து தரப்படும் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதன் முறையாக கோயிலின் உரிமை ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. திருக்கோயில்களை கொள்ளையடிக்கும் ஒரு சில கும்பல் பட்டாக்களை கூட பெயர் மாற்றம் செய்துள்ளனர். அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்கும் திருக்கோயில்களின் வரவு, செலவு கணக்கு விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.” என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.








