ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களின் உத்தரவை ஏற்று, தொலைக்காட்சிகளில் பெண் செய்திவாசிப்பாளர்கள் தங்களின் முகத்தை புர்காவை அணிந்து மறைத்துக் கொண்டு பணியாற்றினார்.
ஆயுதம் ஏந்திய தலிபான்கள் கடந்த ஆண்டு அதிரடியாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். அப்போது முதல் பல்வேறு உத்தரவுகளை தலிபான்கள் பிறப்பித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் இஸ்லாமிய முறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இம்மாத தொடக்கத்தில், பெண்கள் அனைவரும் பொது வெளியில் புர்காவை அணிந்து வர வேண்டும் என்று அந்நாட்டுத் தலைவர் ஹிபதுல்லா அகுன்சடா உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கான அமைச்சகம், தொலைக்காட்சிகளில் பெண் செய்திவாசிப்பாளர்களும் சனிக்கிழமை முதல் புர்கா அணிந்து முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
எனினும், சனிக்கிழமை அன்று புர்கா அணியாமல் தான் பெண்கள் செய்தி வாசித்தனர். எனினும், இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) புர்கா அணிந்து வெறும் கண்கள் மட்டுமே தெரியும் வகையில் செய்திகளை தொலைக்காட்சிகளில் வாசித்தனர். இதுகுறித்து TOLOnews நிறுவனத்தில் பணிபுரியும் சோனியா நியாசி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் முகக்கவசம் அணியக் கூடாது என்றும் மாறாக, புர்கா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டோம். ஒருவேளை புர்கா அணியாமல் செய்தி வாசிக்க முன்வரும் பெண்களுக்கு வேறு வேலை கொடுக்க வேண்டும்; அல்லது பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று நிர்வாகத்துக்கு அழுத்தம் தரப்பட்டது. அதைத்தொடர்ந்து நாங்கள் புர்கா அணிந்து செய்தி வாசிக்க வைக்கப்பட்டோம்” என்று கூறினார். இதற்கு முன்பு வரை முக்காடு மட்டுமே அணிந்து பெண் செய்தியாளர்கள் செய்திகளை வாசித்து வந்தனர்.
முன்னதாக, நடிகைகள் முகம் காண்பித்து நடித்த நாடகங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதை ஏற்கனவே நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆணாதிக்க தேசமாக இருந்த ஆப்கனில் அமெரிக்க ராணுவத்தின் தலையீடு கடந்த இரண்டு தசாப்தங்களாக இருந்தது. அப்போது பெண்களும், சிறுமிகளும் ஓரளவு சுதந்திரத்துடன் நடமாடினர். கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவம் ஆப்கனைவிட்டு வெளியேறிய பிறகு, தலிபான் ஆட்சிக்கு வந்தனர். அப்போது முதல், பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு எதிராக தலிபான்கள் தலைமையிலான அரசு விதித்து வருகிறது.








