பழங்குடியின மக்கள் தான் நூறு சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியார் விடுதியில் மருந்து
உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இரண்டுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் திரைப்பட நடிகர் இளவரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாட்டில் மருந்து உறபத்தி என்பது மிகவும் இன்றியமையாது. மேலும் ஜெனிட்டிக் மெடிசின் மற்றும் நிலையான நிறுவனங்கள், மருந்து நிறுவனங்களின் மருந்துகள் விலையில் பல்வேறு மாற்றங்கள் உள்ளது என கூறினார்.
அதற்கான காரணம், நிலையான பெயர் உள்ள நிறுவனங்கள் மருந்து ஆராய்ச்சிக்கும் மற்றும் மருந்து தயாரிக்கவும் ஆகின்ற செலவினங்கள் அதிகளவில் உள்ளதால் விலையில் மாற்றங்கள் உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகையான நோய்களுக்கும் மருந்துகள் கிடைக்கின்றன எனவும், அதை மக்கள் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 93.6 சதவீதம் பேரும், 2 வது தவணை 85.05 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் அரசுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் பழங்குடி மக்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், இந்த கருத்தரங்கில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை 0% ஆகக் குறைத்து, அதன் மூலம் நோய்வாய்ப்பட்ட பொது மக்களின் சுமையைக் குறைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அமைச்சகத்தையும் கேட்டுக் கொள்கிறோம். உடனயாக அரசிடம் பேசி நடவடிக்கை செய்யப்படும் என தெரிவித்தார்.








