தெலங்கானா ரேஷன் கடைகளில் ஏன் மோடி படம் இடம்பெறவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பிய நிலையில், இங்கு எதுவும் இலவசம் இல்லை என சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பீர்கார் என்ற இடத்தில் உள்ள ரேஷன் கடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பேனரில் பிரதமர் மோடி படம் இடம்பெறாதது ஏன்? என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், நிர்மலா சீதாராமன் கேட்டார். மேலும் அவர் கேட்ட பல கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெரியவில்லை என்று பதில் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், கோபமடைந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரேஷனில் வழங்கப்படும் அரிசிக்கு மத்திய அரசுதான் அதிக நிதி ஒதுக்குவதாகவும் ஆனால் மாநில அரசு வழங்குகிறது என கூறிக் கொள்வதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டினார். ஆனால், இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று சாடிய அவர், ஐஏஎஸ் படித்தவர்கள் மத்திய அரசுக்கு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு தெலங்கானா நிதியமைச்சர் ஹரிஷ்ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தேவையற்ற கேள்விகளை ஆட்சியரிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள், காஸ் சிலிண்டரில் அதன் விலை மற்றும் பிரதமரின் புகைப்படத்தை ஒட்டியுள்ளனர்.
இதுபற்றி சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “ஒருவேளை ஜிஎஸ்டி ரசிதுகளிலும் மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் போல. மக்களின் பணத்தை ஒருவரின் தொண்டாக குறிப்பிடுவது நியாயமானது அல்ல, அபத்தமானது. இங்கு எதுவும் இலவசம் இல்லை. இந்தியர்கள் அனைவரும் வரி செலுத்துகிறார்கள்” என்று கூறியுள்ளார்.