தெலங்கானா மாநிலத்தில் 20 வயதே ஆன ஐடிஐ படித்த பெண் ஒருவர் ஜூனியர் லைன் மேன் தேர்வில் வெற்றிபெற்று பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நாட்டின் முதல் லைன்வுமென் ஆகி அசத்தியுள்ளார்.
பொதுவாக மின்துறையில் அலுவலக வேலைகளுக்கு மட்டுமே பெண்கள் விண்ணப்பிப்பது வழக்கம். ஏனெனில் லைன்மேன் உள்ளிட்ட பணிகளில் மின்கம்பங்கள் அமைப்பது அதில் ஏறி பழுதுபார்ப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கலான வேலைகள் இருப்பதால் அதில் ஆண்கள் மட்டுமே இதுவரை தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் தெலங்கானாவை சேர்ந்த 20 வயது இளம்பெண் பல்வேறு தடைகளை தாண்டி நாட்டின் முதல் லைன்வுமென் ஆக தேர்வாகியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஐடிஐ தொழில் படிப்பு முடித்த பாப்பூரி ஸ்ரீஷா என்ற இளம்பெண் அம்மாநிலத்தின் தெற்கு மின்துறை சார்பில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளார். ஆனால் லைன்மேன் பணியில் பெண்கள் இதுவரை பணிபுரிந்ததில்லை என்பதால் அவரை பணியில் அமர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 2019 ஆம் ஆண்டு ஸ்ரீஷாவுக்கு பணி வழங்கப்பட்டவில்லை, இருப்பினும் தனது முடிவில் உறுதியாக இருந்த ஸ்ரீஷா, தான் தேர்வு செய்யப்பட்ட லைன் மேன் பணியை தனக்கு வழங்குமாறு தெலங்கானா உயர் நீதிமன்றத்தை நாடினார். தற்போது அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதை தொடர்ந்து பாப்பூரி ஸ்ரீஷா நாட்டின் முதல் லைன்வுமென் ஆக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். ஆண்களை போலவே 18 அடி மின்கம்பங்களில் சர்வசாதாரணமாக ஏறும் ஸ்ரீஷா ஆண்களுக்கு சலைத்தவர்கள் பெண்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.
இது தொடர்பாக தெரிவித்துள்ள பாப்பூரி ஸ்ரீஷா, நான் ஐடிஐ படித்துள்ளேன், எனக்கு முதலில் லைன் மேன் தேர்வு தொடர்பான விழிப்புணர்வு இல்லை, அதற்கு ஆண்கள் தான் சரியானவர்கள் என கூறுகின்றனர், ஆனால் நான் இந்த பணியை பெறவேண்டும் என தெளிவாக இருந்தேன், அதற்காக விண்ணபித்து தேர்வில் வெற்றிபெற்றேன், மின்கம்பங்களில் ஏறும் பயிற்சியையும் மேற்கொண்டேன், இருப்பினும் எனக்கு பணி மறுக்கப்பட்டபோது நான் நீதிமன்றத்தை நாடினேன், தற்போது வெற்றி கிடைத்துள்ளது, தனக்கு இந்த பணியை வழங்க உதவிய தெலங்கானா முதலமைச்சர் மற்றும் நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.