அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.31 லட்சம் கோடியாக உயர்வு!

அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.31 லட்சம் கோடி, இது கடந்த ஆண்டை விட 22.9% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்கான மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 22.9 சதவீதம் அதிகரித்து ரூ.2.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இறக்குமதி வருவாயில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வும், உள்நாட்டு வரி வசூலில் நிலையான வளர்ச்சியும் இதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. இன்று நவ.1 வெளியிடப்பட்ட தற்காலிக அரசு தரவுகளின்படி இந்த விவரம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1.88 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்த ஆண்டு ரூ.2.31 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வரி திருப்பித் தரப்பட்ட தொகையைக் கழித்த பிறகு கிடைக்கும் நிகர ஜிஎஸ்டி வருவாய் 25.6 சதவீதம் உயர்ந்து ரூ.2.03 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.1.61 லட்சம் கோடியாக இருந்தது.

இறக்குமதி வருவாயில் 42.2% வளர்ச்சி

இந்த உயர்வுக்கு இறக்குமதி வருவாயே முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது. இறக்குமதி வாயிலான ஜிஎஸ்டி வசூல் 42.2 சதவீதம் அதிகரித்து ரூ.72,246 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2025 அக்டோபரில் இது ரூ.50,796 கோடியாக இருந்தது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான வசூல் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.1.59 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.1.37 லட்சம் கோடியாக இருந்தது.

அக்டோபர் மாதத்தில் அரசு ரூ.27,934 கோடி மதிப்பிலான வரித் திருப்பித் தொகையை வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கான வரித் திருப்பித் தொகை 9.8 சதவீதம் உயர்ந்து ரூ.14,007 கோடியாகவும், இறக்குமதிக்கான வரித் திருப்பித் தொகை 3.4 சதவீதம் அதிகரித்து ரூ.13,927 கோடியாகவும் உள்ளது. வரித் திருப்பித் தொகையைக் கழித்த பிறகு, உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான நிகர வருவாய் 16.4 சதவீதம் உயர்ந்து ரூ.1.45 லட்சம் கோடியாக உள்ளது. சுங்கம் தொடர்பான ஜிஎஸ்டி நிகர வசூல் 56.2 சதவீதம் அதிகரித்து ரூ.58,319 கோடியாக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் வாரியாக ஜிஎஸ்டி வசூல்

முக்கிய மாநிலங்களில் மகாராஷ்டிராவில் உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் 13 சதவீதம் உயர்ந்து ரூ.35,150 கோடியாகப் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் 18 சதவீதம் அதிகரித்து ரூ.15,922 கோடியாகவும், குஜராத்தில் 16 சதவீதம் உயர்ந்து ரூ.13,516 கோடியாகவும், தமிழ்நாட்டில் 3 சதவீதம் உயர்ந்து ரூ.11,661 கோடியாகவும் வசூலாகியுள்ளது. ஹரியானாவில் 17 சதவீதம் அதிகரித்து ரூ.11,529 கோடியாகப் பதிவாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் 47 சதவீதம் உயர்ந்து ரூ.1,934 கோடி வசூலாகியுள்ளது. உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தலா 24 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.

ஏழு மாதங்களில் ரூ.14.77 லட்சம் கோடி வசூல்

நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களான ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 13.2 சதவீதம் அதிகரித்து ரூ.14.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.13.05 லட்சம் கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் நிகர ஜிஎஸ்டி வசூல் 12.6 சதவீதம் அதிகரித்து ரூ.12.69 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் புள்ளிவிவரங்கள், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக வரி வருவாய் வலுவான உயர்வைக் கண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.