தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக கே.என். நேரு இருந்தபோது, நகராட்சித்துறையில் உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் ரூ.634 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்தது. இதுசம்பந்தமாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழ்நாடு அரசு டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கே.என்.நேரு தரப்பில் தனது தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதால் தனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, கே.என்.நேரு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “வழக்கில் தொடர்புடைய கே.என்.நேரு தனது துறைக்கு பொறுப்பாளராக இருந்துள்ளார். முறைகேட்டுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிவது முக்கியம். எனவே கே.என்.நேரு மீதான குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்வது அவசியமாகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. கே.என்.நேரு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி அவர்து மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.




