அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் மத்திய அரசானது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை (MGNREGA) மேம்படுத்தி வி.பி.ஜி. ராம் ஜி என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே வி.பி.ஜி. ராம் ஜி சட்டத்தைக் கொண்டுவரும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ”வி.பி.ஜி. ராம் ஜி சட்டமானது, ஏழை மற்றும் பெண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கிறது என்றும், மாநிலங்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தி கூட்டாட்சித் தத்துவத்தையும் பலவீனப்படுத்துகிறது. எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின் கீழ் உள்ள நிதி ஒதுக்கீட்டு முறையே தொடர வேண்டும். புதிய சட்டத்தின் தலைப்பில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதன் மூலம் அவரது தத்துவம் பலவீனப்படுத்தப்படுகிறது. விவசாயப் பருவத்தின் போது 60 நாட்கள் வேலையை நிறுத்தி வைக்கும் விதிமுறையானது நிலமற்ற ஏழைகளுக்கு அநீதி இழைக்கும். இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டும், தொழிலாளர் குடும்பங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமானது உள்ளபடியே தொடர வேண்டும் என்று இந்தச் சட்டமன்றம் தீர்மானிக்கிறது” என்றார்.
தெலுங்கானா சட்டமன்றத்தில் உள்ள பாஜக உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அரசின் கருத்துகளை மறுத்த பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் ஏ. மகேஷ்வர் ரெட்டி, ”புதிய சட்டம் மகாத்மா காந்தியின் ‘கிராம சுயராஜ்யம்’ என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய உதவுகிறது என்று கூறினார். வி.பி. ஜி. ராம் ஜி விவசாயிகளுக்கு உதவுகிறார், ஏனெனில் அவர் விவசாயப் பருவத்தின் போது தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கப் பணிகளை நிறுத்தி வைக்கிறார் என்றும் கூறினார்.







