ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ. 1 கோடி வெள்ள நிவாரண நிதியை வழங்கினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதில், பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இந்த வரலாறு காணாத மழையால் 29 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த பாதிப்புகளால் அந்த மாநிலத்துக்கு ரூ.5,438 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அந்த மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இன்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதி ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ரேவந்த் ரெட்டி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.







