பற்களை பிடுங்கிய விவகாரம் : நெல்லை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில்  நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை அங்கு பணியாற்றிய காவல்…

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில்  நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை அங்கு பணியாற்றிய காவல் துறை
ஏஎஸ்பி பல்வீர் சிங்  பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதே போல் மாநில மனித உரிமை ஆணையத்திலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவத்தை கண்டித்தும் காவல் அதிகாரி பல்வீர் சிங்கை கைது செய்ய கோரியும்
பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வரும்
நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை அம்பாசமுத்திரம் அருகே
உள்ள சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த  மாரியப்பன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அம்பை சரக்கத்திற்கு புதிய சரக காவல்துறை கண்காணிப்பாளராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார்..

கடந்த மார்ச் 29ம் தேதி  சட்டப் பேரவை கூட்டம் கூடியதும் எதிர்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். ”விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களை அரசு  ஒருபோதும் அனுமதிக்காது. இது தொடர்பாக காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக விளக்கம்  அளித்தார்.


இந்த நிலையில் நெல்லை மாவட்ட  எஸ்.பி யாக இருந்த  சரவணன் தற்போது காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் துாத்துக்குடி எஸ்.பி. யாக உள்ள பாலாஜி சரவணனுக்கு கூடுதல் நெல்லை மாவட்ட எஸ்பியாக கூடுதல்  பொறுப்பு அளித்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.  நெல்லை அம்பாசமுத்திரம் பகுதியில் குற்றவாளிகள் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.