பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு

அம்பாசமுத்திரம் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக  காவல்துறை தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது…

அம்பாசமுத்திரம் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக  காவல்துறை தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டார். ஏற்கனவே முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்த அமுதா, 2வது கட்ட விசாரணையை தொடங்கினார்.

விசாரணையின் போது, மாரியப்பன், சுபாஷ், இசக்கிமுத்து, வேத நாராயணன், செல்லப்பா மற்றும் மாரியப்பன் ஆகிய 6 பேர் ஆஜராகினர். இந்த 6 பேருடன்  எதிர் தரப்பினரும் விசாரணைக்கு நேரில் வருகை தந்த நிலையில், மொத்தம் 12 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.

இதனிடையே, விசாரணை நடைபெற்ற அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு நின்றிருந்த உளவு பிரிவு காவல்துறையினரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறை மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையால், காவலர்களை வெளியேற்றி அமுதா விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் இந்திய தண்டனைச் சட்டம், 324 (பயங்கரமான ஆயுதம் அல்லது வேறு வகைகளில் காயம் ஏற்படுத்துதல்), 326 (தன்னிச்சையாக பயங்கரமான ஆயுதத்தால் அல்லது வேறு வகைகளில் கொடுங்காயம் ஏற்படுத்துதல்) மற்றும் 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக காவல் துறை தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“ பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பாக எழுந்த  புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமித்து ஓர் உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. அவர் இன்று அரசுக்கு அளித்த இடைக்கால அறிக்கையில், இந்தப் புகார்கள் குறித்த விசாரணை குற்றப்பிரிவு காவல் புலனாய்வுத் துறையால் (CBCID) மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்துள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.