பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30, அன்று திரையிடத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நானே வருவேன் படம் ஒரு நாள் முன்னதாக 29ஆம் தேதி வெளியாகும்.
தனுஷ் தற்போது நடித்துவரும் நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும் அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வ ராகவனால் இயக்கத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தனுஷின் முந்தைய படமான திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல லாபம் ஈட்டி வரும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் மூலம் தனுஷ் தனது சகோதரர் செல்வ ராகவனுடன் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார் என்பதாலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் செல்வராகவனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இருவரும் துள்ளுவதோ இளமை, கண்டு கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது நானே வருவேன் படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ‘வீரா சூரா’ பாடல் யுவனின் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் இன்று மாலை 6: 40 மணியளவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
நானே வருவேன் திரைப்படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் மோதவுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30, அன்று திரையரங்குகளில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நானே வருவேன் திரைப்படம் ஒரு நாள் முன்னதாக அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவிவருகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகாத நிலையில் இன்று மாலை வெளியாகும் டீசரில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது








