நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்
“ஓட்டுக்கு யார் அதிகமாகப் பணம் கொடுப்பது என்பதில் மட்டும்தான் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையேயான போட்டி நிலவுகிறது. ஆனால் நாங்கள், உலகளாவிய அரசியலை முன்வைக்கிறோம். புவி வெப்பமடைதல் போன்ற உலகப் பிரச்னைகளைப் பற்றி நாம் பேசி வருகிறோம். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் போல, ஒரு நாள் உலகமே நீரின்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்று நாம் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறோம். ஐநா சபை மற்றும் ஆய்வாளர்கள் பூமியின் வாழ்நாள் குறித்து எச்சரித்தும், எந்தத் தலைவரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
ஒரு நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆசிரியர்களை வீதியில் நிறுத்திவிட்டு, இது ஒரு நல்லாட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்? 6,800 கோடி ரூபாய் ஒரு பொங்கலுக்குச் செலவு செய்கிறார்கள். 12,000 கோடி ரூபாய் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு வழங்குகிறார்கள். ஒரு குடும்பத் தலைவியை, ஒரு நாளைக்கு 30 ரூபாய் கூடச் சம்பாதித்துக் கொள்ள முடியாத நிலையில் நீங்கள் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்.
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் கண்டனத்துக்குரியது. ஒரு செய்தியாளரைத் தாக்குவது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்
இடைநிலை ஆசிரியர்கள் போராடுகிறார்கள், எத்தனை காலத்திற்கு இவர்களை ஏமாற்றுவீர்கள்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது நிறைவேற்றுவேன் என்று சொன்ன கோரிக்கையை, இப்போது ஏன் நிறைவேற்றவில்லை? தேர்தல் நேரத்தில் எங்களது வாக்கு போய்விடுமோ என்ற அச்சத்திலாவது நிறைவேற்றக் கூடாதா..?” என்றார்.







