கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரம் – ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம்.!

கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும்…

கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி தனது பெற்றோருடன்,  கடந்த 21ஆம் தேதி கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார்.  அதில் ஆசிரியர் அபிநயா என்பவர் மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதுடன்,  உனது பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர் என்று கேட்டுள்ளார்.

இதற்கு மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக மாணவி தெரிவித்தாகவும்,  அதற்கு “மாட்டுக்கறி சாப்பிட்டு திமிருடன் ஆடுறியாடி” என்று ஆசிரியர் அபிநயா சொல்லி அடித்ததாகவும்,  பிற மாணவிகளின் காலணியை புர்காவை வைத்து துடைக்க வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதோடு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியிடம் புகார் அளித்ததற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த புகார் குறித்து முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நேரடியாக
பள்ளியில் விசாரணை மேற்கொண்டார்.  பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மற்றும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் நடந்த சம்பவம் குறித்து அவர் விசாரணை மேற்கொண்டார். மேலும் கோவை மாநகர காவல் உதவி ஆணையர் சந்திரசேகரும்,  துடியலூர் காவல் நிலைய போலீசாரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவர் , இது குறித்து மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் , குழந்தைகள் நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரை இணைத்து விசாரணை நடத்திட உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி உள்பட 2 பேர் மீது சிறுபான்மை நலத்துறை தாசில்தார் விசாரணைக்கும் உத்தரவீடுள்ளது. இந்த நிலையில் பயிற்சி ஆசிரியை அபிநயா நீலகிரி மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.