வணிக நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவது காளான்களை போல் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை, ரத்து செய்யக்கோரி திருப்பூரை சேர்ந்த ஸ்ரீ அன்னப்பூர்ணா ஹோட்டல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள், எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, வரி ஏய்ப்பு செய்வதால் நாடு மிகப்பெரிய பிரச்னைகளை சந்திப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், சில ஹோட்டல் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தரமான உணவுகளை வழங்குவதில்லை என்றனர்.
தொடர்ந்து, வணிக நிறுவனங்கள் காளான்களை போல் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அபராதம் மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.







