தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போதே அவர் 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனவும் தெரிவித்தார். எந்த கட்சியினருடனும் கூட்டணி வைக்கமாட்டோம் எனவும், இடைப்பட்ட இந்த 2 ஆண்டுகளில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.
தற்போது நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் கட்சி தீவிரமாக இறங்கி வருகிறது. மேலும் வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து சட்டமன்ற தேர்தலில் களம் காணுமா என்னும் கேள்வியும் அண்மை நாட்களாக எழுந்து வருகிறது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அப்போது மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும் கரூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.







