மக்களுக்காக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பிரிவு உபசார விழாவில், அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையில், கிருபாகரனுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நீதிபதி கிருபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பேசிய நீதிபதி கிருபாகரன், ஒருபோதும் தன்னை நீதிபதியாக நினைத்து கொண்டதில்லை என்றும், சாதாரண நபராகவே இருந்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 125 ஆண்டு பழமையான உயர்நீதிமன்ற கட்டடத்தில் நீதிபதியாக பணியாற்றியதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார். மேலும், வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும் என இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார். உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியது திருப்தி அளித்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாததும், டாஸ்மாக் கடைகளை மூட முடியாததும் மனநிறைவை அளிக்கவில்லை என அவர் வேதனை தெரிவித்தார். மேலும், மதுவிலக்கு கொண்டு வர அரசு முயற்சிக்கு வேண்டும் என்றும், சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் எனவும் நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தினார்.







