நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அம்பாசமுத்திரத்தியில், குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, வீடு ஒன்றில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்லும் பாதையாகிய இப்பகுதியில், அடுக்கு மாடி குடியிருப்பு, அரசு அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பு, அம்பாசமுத்திரம் வட்ட வருவாய் வரி அலுவலகம் போன்றவைகளும், சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளது.
இப்பகுதியிலேயே மது அருந்திவிட்டு, இச்சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சிலர் தொந்தரவு கொடுக்கின்றனர். இதன் காரணமாக, இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை மனுக்களை அப்பகுதி பொதுமக்கள் அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். ஆனாலும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில், டாஸ்மாக் கடை அகற்றக் கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பாசமுத்திரம் போலீசார், அவர்களுடன்பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வார கால அவகாசத்திற்குள் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றி தருவதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
-சௌம்யா.மோ






