ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர்களை நூதன முறையில் எலான் மஸ்க் வெளியேற்றியுள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்விட்டரை வாங்கிய அன்றே அதன் தலைமை நிர்வாக அதிகாரியை அதிரடியாக நீக்கினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டரில் தான் தலைமை செயல் அதிகாரியாக தொடர வேண்டுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து புதிய தலைமை செயல் அதிகாரியை தேடும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டார். இதன் பின்னர் எலான் மஸ்க்கின் செல்ல பிராணியான அவரது வளர்ப்பு நாய் பிளாக்கி ட்விட்டரின் புதிய சி.இ.ஓ. என மஸ்க் அறிமுகப்படுத்தி சர்ச்சையை கிளப்பினார்.
இதனையும் படியுங்கள்: ‘நாட்டு நாடு’ பாடலுக்கு ஆஸ்கர் மேடையில் நடனமாடும் பிரபல அமெரிக்க நடனக் கலைஞர் லாரன் காட்லீப்
இந்த நிலையில் எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் பணி புரியும் தலைமை மேலாளர்களிடம் அவரவர் தங்களது குழுக்களிலிருக்கும் சிறந்த ஊழியர்களது பட்டியலை தயாரித்து சமர்பிக்க கூறினார். அதன்படி தலைமை மேலாளர்களும் பட்டியலை தயார் செய்து கொடுத்துள்ளனர்.
இதன் பின்னர் அந்த பட்டியலிலிருந்த ஊழியர்களுக்கு உயர் பதவிக் கொடுத்த எலான் மஸ்க், அந்த பட்டியலை தயாரித்துக் கொடுத்த அனைத்து தலைமை நிர்வாகிகளையும் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் செலவை குறைக்க அதிக சம்பளம் வாங்கும் பழைய ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாக இதுகுறித்து எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய தயாராக இருக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளார்.
முந்தைய மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிக ஊதியம் பெறுகிறார்களே ஒழிய, நிறுவனத்தின் வெற்றிக்கு போதுமான பங்களிப்பை வழங்கவில்லை எனவும் எலான் மஸ்கின் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஐநியூஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
– யாழன்







