நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் அயலக தமிழர்களின் பிரச்சனை குறித்த கலந்தாய்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், வேலை தேடி செல்லக்கூடிய தமிழர்களின் பாதுகாப்புக்காக உரிய சட்ட திட்டங்களை உருவாக்குவது தொடர்பாகவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறினார்.
போலி ஏஜெண்டுகள் மூலமாக செல்லக்கூடியவர்கள் மட்டுமே வெளிநாட்டில் சிக்கி தவிப்பதாகவும் அவர்களையும் மீட்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாக அமைச்சர் கூறினார். அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலமாக மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும். அவ்வாறு செல்வோரும் முறையாக பதிவு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
படித்த இளைஞர்கள் வெளிநாடு வேலைக்கு செல்லும் போது என்ன வேலைக்கு செல்கிறோம்? எதன் அடிப்படையில் செல்கிறோம் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்திய அமைச்சர் மஸ்தான், நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்ற உறுதியையும் அளித்தார்.







