அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கின்றன.
பன்னெடுங்காலமாக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் விவசாயம் செய்தும், மாடுகளை மேய்த்தும் தங்களது வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கான அதிகாரம் அம்மாநில வனத்துறைக்கு கொடுத்தது யார் ? இப்படுகொலையை கண்டித்து அப்பகுதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடும் நிலையில், மான் வேட்டையாடியதாலே சுட்டுக் கொன்றதாக அம்மாநில வனத்துறை அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல.
எனவே, கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில அரசிடம் உரிய விளக்கம் கேட்பதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டுவரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




